Published : 09 Jan 2020 01:33 PM
Last Updated : 09 Jan 2020 01:33 PM

மறைமுகத்தேர்தல் நடைமுறை முழு வீடியோ பதிவு செய்யக்கோரி திமுக முறையீடு: உயர் நீதிமன்றம் ஏற்றது

ஊரக உள்ளாட்சித்தேர்தலில் வெற்றிப்பெற்றவர்களுக்கான மறைமுகத்தேர்தல் வரும் ஜன.11 அன்று நடைபெற உள்ளது. அந்தத்தேர்தல் முழுவதையும் வீடியோ எடுக்கக்கோரி திமுக சார்பில் செய்யப்பட்ட முறையீட்டை உயர் நீதிமன்றம் ஏற்றது.

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சித்தேர்தல் 27 மாவட்டங்களில் நடைபெற்றது. இரண்டுக்கட்டமாக டிச. 27 மற்றும் 30 தேதிகளில் நடைபெற்ற தேர்தலின் வாக்கு எண்ணிக்கை ஜனவரி.2-ம் தேதி நடைப்பெற்றது. இதில் திமுக, அதிமுக இரண்டுக்கட்சிகளும் கணிசமான இடங்களைப்பெற்றன.

மாவட்ட ஊராட்சிக்கு உட்பட்ட 515 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்களில் திமுக கூட்டணி 271 மற்றும் அதிமுக கூட்டணி 240 உறுப்பினர்களையும் பெற்றனர். 5090 ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்களில் திமுக கூட்டணி 2356 இடங்களிலும், அதிமுக கூட்டணி 2199 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.

இருதரப்பும் கணிசமான வார்டுகளை வென்றுள்ளதால் வரும் 11-ம் தேதி நடக்கும் மாவட்ட ஊராட்சி தலைவர், துணைத் தலைவர்; ஊராட்சி ஒன்றிய குழு தலைவர், துணை தலைவர் ஆகியோரை தேர்வு செய்வதற்காக மறைமுக தேர்தலில் முறைகேடுகள் நடக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் மறைமுக தேர்தலில் அதிமுக-வினர் முறைகேடுகள் செய்ய அதிக வாய்ப்புள்ளதால், அந்த நடைமுறையை முழுமையாக வீடியோ பதிவு செய்யக்கோரி திமுக தரப்பில் வழக்கு தொடர இருப்பதாகவும், அதை அவசர வழக்காக விசாரிக்க வேண்டுமென நீதிபதிகள் எம்.சத்யநாராயணன், ஆர். ஹேமலதா அமர்வில் வழக்கறிஞர் நீலகண்டன் முறையீடு செய்தார்.

அவரது முறையீட்டை ஏற்ற நீதிபதிகள், மனுத்தாக்கல் நடைமுறைகளை முழுமையாக முடித்தால் வழக்கை மதியம் விசாரிப்பதாக ஒப்புதல் அளித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x