Published : 09 Jan 2020 01:03 PM
Last Updated : 09 Jan 2020 01:03 PM

சட்டத்தை இயற்றிவிட்டு ஆதரவுப் பேரணியும் நடத்துவது புதுமை: பாஜகவை விமர்சித்த திருமாவளவன்

சட்டத்தை இயற்றிவிட்டு அதற்கு ஆதரவுப் பேரணியையும் அரசே நடத்துவது புதுமை என விசிக தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்தார்.

மதுரை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன், "இந்திய அரசியல் வரலாற்றில் இல்லாத ஒரு புதுமையாக, மத்திய அரசு குடியுரிமை திருத்தச் சட்டத்தை இயற்றி விட்டு மக்களிடம் ஆதரவு கேட்டு பேரணி செல்கின்றனர்.

அந்த அளவிற்கு சட்டத்திற்கு அனைத்து தரப்பு மக்கள் மத்தியிலும் எதிர்ப்பு நிலவுகிறது. அரசியல் கட்சியைத் தாண்டி ஜனநாயக சக்திகளும் மிகக்கடுமையாக இந்தச் சட்டத்திற்கு எதிராக கடுமையாக போராடிக் கொண்டிருக்கின்றன.

இந்த நிலையில் பாரதிய ஜனதா தான் இயற்றிய சட்டத்திற்கு தானே ஆதரவுப் பேரணி நடத்துவது புதுமையாக இருக்கிறது. அதிமுக, பாமக இணைந்து ஆதரவு தந்ததால் தான் இந்தச் சட்டம் இயற்றப்பட்டுள்ளது.

இந்தச் சட்டம் தமிழகத்தில் 1-தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்ற செய்திகள் வெளியிடப்பட்டு வருகிறது. தனது நிலைப்பாட்டிலிருந்து அதிமுக அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்பது மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

மறைமுகத் தேர்தலுக்கு எதிரான வழக்கை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது ஊழல் பெருகுவதற்கு வழிவகுக்கும். நெல்லை கண்ணன் மீது போடப்பட்ட வழக்குகளை திரும்பப் பெற வேண்டும்.

பாஜக அரசு கொடுக்கின்ற வேண்டுகோளுக்கு இணங்க அதிமுக அரசு செயல்படுவது அதிமுக அரசின் பலவீனத்தைக் காட்டுகிறது.

நேற்றைய தினம் தொழிற்சங்கங்கள் போராட்டங்கள் நடைபெற்ற வேளையில், பெல் நிறுவனத்தின் பங்குகளை விற்பனை செய்ய அமைச்சரவை கூட்டம் அனுமதியளித்தது கண்டிக்கத்தக்கது.

பட்ஜெட் பற்றி மக்களிடம் கருத்து கேட்பது நாடகம் இன்னும் ஓரிரு நாட்களில் நாடாளுமன்றம் கூட இருக்கிறது.இந்த நேரத்தில் அவர் கருத்து கேட்கிறார் என்றால் பட்ஜெட் தயாரித்து விட்டு பின் மக்களிடம் கருத்து கேட்பது என்பது நாடகம் என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

அலங்காநல்லூர் பாலமேடு ஆகிய ஜல்லிக்கட்டுகளில் அனைத்து சமுதாயத்தையும் சேர்த்து நடத்த வேண்டும். இது ஜனநாயக நடைமுறை" எனக் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x