Published : 09 Jan 2020 12:43 PM
Last Updated : 09 Jan 2020 12:43 PM

காவல் உதவி ஆய்வாளர் சுட்டுக் கொலை; குற்றவாளிகளை பிடிக்க 4 தனிப்படைகள்- முதல்வர் பழனிசாமி

காவல் உதவி ஆய்வாளரை சுட்டுக் கொன்றவர்களை கண்டுபிடித்து, அவர்களுக்கு கடும் தண்டனை வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என, சட்டப்பேரவையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி உறுதி அளித்துள்ளார்.

கன்னியாகுமரி கேரள எல்லையில் களியக்காவிளை சோதனைச் சாவடி உள்ளது. இங்கு நேற்று (ஜன.8) இரவு, சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் பணியிலிருந்தார். அவ்வழியாக செல்லும் வாகனங்களை நிறுத்தி சோதனை செய்துக்கொண்டிருந்தார். அப்போது கேரள எல்லையிலிருந்து கன்னியாகுமரி நோக்கி ஸ்கார்பியோ வாகனம் ஒன்று வந்துள்ளது. அதை நிறுத்தி வில்சன் சோதனையிடும் போது திடீரென அதில் வந்தவர்கள் வில்சன் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இதில் மார்பு, வயிறு, தொடையில் குண்டுப்பாய்ந்த வில்சன் அங்கேயே சுருண்டு விழுந்துள்ளார்.

துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டு மற்ற காவலர்கள் அங்கு ஓடிவந்துள்ளனர். அதற்குள் வில்சனை சுட்ட மர்ம நபர்கள் ஸ்கார்பியோ காரில் தப்பிச் சென்றுவிட்டனர். ரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போராடிய வில்சனை சக காவலர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். ஆனால் சிகிச்சைப்பலனின்றி வில்சன் உயிரிழந்தார்.

இதுதொடர்பாக, போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இச்சம்பவம் தொடர்பாக, இன்று (ஜன.9) சட்டப்பேரவையில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, "சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அறிந்த தெற்கு மண்டல காவல் துறை தலைவர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட காவல் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், எனது உத்தரவின் பேரில் காவல் துறை தலைமை இயக்குநரும் சம்பவ இடத்திற்கு உடனடியாகச் சென்று விசாரணையை மேற்கொண்டு வருகிறார்.

சம்பவ இடத்தில் இரண்டு தோட்டாக்கள் மற்றும் இரண்டு காலி தோட்டாக்கள் ஆகியவற்றை காவல் துறையினர் கைப்பற்றியுள்ளனர்.

இதுதொடர்பாக களியக்காவிளை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இவ்வழக்கில் எதிரிகளை அடையாளம் கண்டு கைது செய்ய, நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தனிப்படையினர், அப்பகுதியிலுள்ள கடைகள் மற்றும் வீடுகளில் அமைக்கப்பட்டுள்ள சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து வருகின்றனர். வழக்கு புலன் விசாரணையில் இருந்து வருகிறது. குற்றவாளிகளை விரைவில் கண்டுபிடித்து, அவர்களுக்கு கடுமையான தண்டனை பெற்றுத் தர அரசு உறுதியான நடவடிக்கை எடுக்கும்.

மறைந்த வில்சனுக்கு மனைவி மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

மறைந்த காவல் உதவி ஆய்வாளர் வில்சனின் குடும்பத்தினருக்கு நிவாரணம் வழங்கப்படும். மேலும் அவரது குடும்பத்தில் ஒருவருக்கு தகுதிக்கு ஏற்றாற்போல், கருணை அடிப்படையிலான அரசுப் பணி வழங்கப்படும்"

இவ்வாறு முதல்வர் பழனிசாமி பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x