Published : 09 Jan 2020 12:24 PM
Last Updated : 09 Jan 2020 12:24 PM

இளம்பெண்ணைக் காப்பாற்ற முயன்று உயிரிழந்த இளைஞருக்குப் பாராட்டு; குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிதி: முதல்வர் அறிவிப்பு

திருவள்ளூர் மாவட்டத்தில் இளம்பெண் ஒருவரைக் காப்பாற்ற முயன்று, உயிரிழந்த இளைஞரின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரண உதவியை முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

திருவள்ளூர் அருகே மப்பேடு கூட்டுச்சாலையில் உள்ள காவல் நிலையம் அருகே கடந்த டிச.26-ம் தேதி இரவு, 30 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர் நரசிங்கபுரம் செல்ல வேண்டும் எனக்கூறி, அவ்வழியே சென்ற ஆட்டோவில் ஏறிப் பயணம் செய்தார்.

அப்போது, ஆட்டோ நரசிங்கபுரம் செல்லாமல் கொண்டஞ்சேரி பகுதியிலிருந்து கடம்பத்தூர் செல்லும் சாலையில் வேகமாகச் சென்றது. இதையறிந்து அதிர்ச்சியடைந்த அந்தப் பெண் கூச்சலிட்டார்.

ஆட்டோவில் பெண்ணின் கூச்சல் சத்தம் கேட்டு, அந்தப் பகுதியில் சாலையோரம் நின்று பேசிக்கொண்டிருந்த கொண்டஞ்சேரியைச் சேர்ந்த யாகேஷ் (22) மற்றும் அவரது நண்பர்களான எஸ்தர் பிரேம்குமார், வினித், பிராங்க்ளின், சார்லி, துரைராஜ் ஆகியோர் அந்த ஆட்டோவை, தங்கள் மோட்டார் சைக்கிள்களில் விரட்டிச் சென்றனர். இதற்கிடையே, ஆட்டோவில் இருந்து குதித்த அந்தப் பெண், லேசான காயத்துடன் உயிர் தப்பினார்.

பிறகு, வேகமாகச் சென்று கொண்டிருந்த ஆட்டோவை யாகேஷும் அவரது நண்பர்களும் விரட்டிச் சென்று, சத்திரம் பகுதியில் வழிமறித்தனர். ஆனால், ஆட்டோ ஓட்டுநர் வேகமாக ஆட்டோவை இயக்கி, யாகேஷின் மோட்டார் சைக்கிள் மீது மோதினார்.

இதில் படுகாயமடைந்த யாகேஷ் சிகிச்சை பலனின்றி டிச.27 அன்று உயிரிழந்தார்.

இதையடுத்து, ஆட்டோ ஓட்டுநர் கைது செய்யப்பட்டு அவர் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், இன்று (ஜன.9) சட்டப்பேரவை கூட்டத்தொடரின் போது, உயிரிழந்த யாகேஷின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரண உதவியை முதல்வர் பழனிசாமி அறிவித்தார்.

அப்போது பேசிய முதல்வர் பழனிசாமி, "இளைஞர்கள் யாகேஷ், எஸ்தர் பிரேம்குமார், வினித், துரைராஜ் மற்றும் பிராங்க்ளின் ஆகிய ஐந்து பேரும் தங்களது உயிரையும் பொருட்படுத்தாமல், இளம்பெண்ணை ஆபத்திலிருந்து காப்பாற்றிய வீரத்தையும், சமூக பொறுப்புணர்வையும் நான் மனதாரப் பாராட்டுகின்றேன்.

இதுபோன்ற நிகழ்வுகளில் காவல் துறையினருடன் இணைந்து, இளைஞர்களும் பொதுமக்களும், தவறைத் தட்டிக் கேட்கவும், போராடவும், துணிச்சலுடன் செயல்படுவது மிகவும் பாராட்டுக்குரியது.

இச்சம்பவத்தில் தனது உயிரைத் துச்சமென மதித்து, ஆபத்திலிருந்த இளம்பெண்ணைக் காப்பாற்றியதோடு மட்டுமின்றி, தவறு செய்த ஆட்டோ ஓட்டுநரைப் பிடிக்கப் போராடி உயிரிழந்த யாகேஷின் தீரச் செயலையும், சமூக அக்கறையையும், அவரது குடும்ப நிலையையும் கருத்தில் கொண்டு சிறப்பினமாக, அவரது குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் ரூபாயும், இவ்விபத்தில் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வரும் பிராங்க்ளின் என்பவருக்கு இரண்டு லட்சம் ரூபாயும், லேசான காயமடைந்த எஸ்தர் பிரேம்குமார், வினித் மற்றும் துரைராஜ் ஆகியோருக்கு தலா 25,000 ரூபாயும் முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்".

இவ்வாறு முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x