

கள்ளத்துப்பாக்கி கலாச்சாரத்திற்கு முடிவு கட்ட வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
கன்னியாகுமரி கேரள எல்லையில் களியக்காவிளை சோதனைச் சாவடி உள்ளது. இங்கு நேற்று (ஜன.8) இரவு, சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் பணியிலிருந்தார். அவ்வழியாக செல்லும் வாகனங்களை நிறுத்தி சோதனை செய்துக்கொண்டிருந்தார். அப்போது கேரள எல்லையிலிருந்து கன்னியாகுமரி நோக்கி ஸ்கார்பியோ வாகனம் ஒன்று வந்துள்ளது. அதை நிறுத்தி வில்சன் சோதனையிடும் போது திடீரென அதில் வந்தவர்கள் வில்சன் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இதில் மார்பு, வயிறு, தொடையில் குண்டுப்பாய்ந்த வில்சன் அங்கேயே சுருண்டு விழுந்துள்ளார்.
துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டு மற்ற காவலர்கள் அங்கு ஓடிவந்துள்ளனர். அதற்குள் வில்சனை சுட்ட மர்ம நபர்கள் ஸ்கார்பியோ காரில் தப்பிச் சென்றுவிட்டனர். ரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போராடிய வில்சனை சக காவலர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். ஆனால் சிகிச்சைப்பலனின்றி வில்சன் உயிரிழந்தார்.
இதுதொடர்பாக, போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இச்சம்பவம் தொடர்பாக, கருத்து தெரிவித்துள்ள பாமக நிறுவனர் ராமதாஸ், கள்ளத்துப்பாக்கி கலாச்சாரத்திற்கு முடிவு கட்ட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் இன்று (ஜன.9) தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், "கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை சோதனைச்சாவடியில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. இந்தக் கொடுமையை செய்தவர்களை அடையாளம் கண்டு தண்டிக்க வேண்டும். காவலர் குடும்பத்திற்கு நிதி உதவி வழங்க வேண்டும்!
தமிழ்நாட்டில் கள்ளத்துப்பாக்கி கலாச்சாரம் பெருகி விட்டதாக பல ஆண்டுகளாக குற்றம்சாட்டி வருகிறேன். அதற்கான ஆதாரம் தான் களியக்காவிளை துப்பாக்கிச்சூடு ஆகும். இனியும் இந்த விஷயத்தில் அலட்சியம் காட்டாமல் கள்ளத்துப்பாக்கி கலாச்சாரத்திற்கு முடிவு கட்ட வேண்டும்" என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.