

பஞ்சாப் நேஷனல் வங்கிக் கொள்ளை வழக்கில் முருகனிடம் ஜன.13-ம் தேதி வரை காவலில் விசாரிக்க கொள்ளிடம் போலீஸாருக்கு ஸ்ரீரங்கம் நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. திருச்சி சமயபுரம் நெ.1 டோல் கேட் பகுதியிலுள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி கிளையில் கடந்தாண்டு ஜன.26, 27-ம் தேதிகளில் சுவரைத் துளையிட்டு, லாக்கர்களை உடைத்து 470 பவுன் நகைகள், ரூ.19 லட்சத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.
இதுகுறித்து கொள்ளிடம் போலீஸார் வழக்கு பதிவு செய்து, 9 மாதங்களுக்குப் பிறகு தஞ்சாவூர் மாவட்டம் புதுக்குடி அருகேயுள்ள காமாட்சிபுரம் நடுத் தெருவைச் சேர்ந்த ரெங்கராஜ் மகன் ராதாகிருஷ்ணன்(28) என்பவரை கைது செய்தனர். இவரிடம் நடத்திய விசாரணையில் பிரபல கொள்ளையன் முருகன், அவரது சகோதரி மகன் சுரேஷ், தனது உறவினரான வாடிப்பட்டி அருகேயுள்ள தெத்தூரைச் சேர்ந்த கணேசன் ஆகியோருடன் சேர்ந்து இக்கொள்ளையில் ஈடுபட்டதாக தெரிவித்தார். இதையடுத்து கணேசன், சுரேஷ் ஆகியோரை இவ்வழக்கின் கீழ் போலீஸார் கைது செய்தனர்.
முக்கிய குற்றவாளியாக கருதப்படும் முருகன் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அவரை இவ்வழக்கின் கீழ் கைது செய்து காவலில் விசாரிப்பதற்காக ரங்கம் நீதி மன்றத்தின் அனுமதி பெற்று பெங்களூருவிலிருந்து திருச்சிக்கு அழைத்து வந்து, கடந்த சனிக்கிழமை இரவு மத்திய சிறையில் அடைத்தனர். இதைத்தொடர்ந்து, பஞ்சாப் நேஷனல் வங்கிக் கொள்ளை வழக்கு தொடர்பாக முருகனிடம் 7 நாட்கள் காவலில் விசாரிக்க அனுமதி கேட்டு ஸ்ரீரங்கம் நீதி மன்றத்தில் கொள்ளிடம் போலீஸார் மனு அளித்தனர். அதன் மீதான விசாரணை நேற்று நடைபெற்றது.
ஜன.13 வரை விசாரணை இதற்காக முருகனை பலத்த பாதுகாப்புடன் அழைத்து வந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது, 6 நாட்கள் (ஜன.8 முதல் ஜன.13 வரை) முருகனிடம் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி அளித்து நீதிபதி சிவகாமசுந்தரி உத்தரவிட்டார். இதையடுத்து, அவரை ரகசிய இடத்துக்கு அழைத்துச் சென்று கொள்
ளிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.