Published : 09 Jan 2020 10:59 AM
Last Updated : 09 Jan 2020 10:59 AM

பொங்கல் பண்டிகை: ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை; அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் உறுதி

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆம்னி பேருந்துகளில் அதிகப்படியான கட்டணம் வசூலிப்பது குறித்து புகார் அளிக்கலாம் என, போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, அவர் இன்று (ஜன.9) சென்னை, கோயம்பேடு பேருந்து நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசியதாவது:

"அரசு பேருந்து நிலையங்களில் சந்தேகங்கள் ஏற்படும் போது, 94450 14450, 94450 14436 ஆகிய செல்போன் எண்களுக்கு தொடர்பு கொண்டு கேட்கலாம். அதேபோன்று, ஆம்னி பேருந்துகள் தொடர்பாக ஏதேனும் புகார்கள் இருந்தால், 18004256151 என்ற இலவச எண்ணுக்கு தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். அதிக கட்டணம் வசூலிப்பது தொடர்பாக புகார்கள் இருந்தால் இந்த எண்ணுக்கு தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

தீபாவளியின் போது அதிக கட்டணத்திற்காக சிறைபிடிக்கப்பட்ட ஆம்னி பேருந்துகள் இன்னும் இயங்கவில்லை. அதிகமாக வசூலிக்கப்பட்ட கட்டணங்கள், பயணிகளுக்கு திருப்பி அளிக்கப்பட்டிருக்கிறது. அதேபோன்று, இப்போதும் அதிக கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இந்திய மோட்டார் வாகன சட்டத்தில் ஆம்னி பேருந்துகளுக்குக் கட்டண நிர்ணயம் கிடையாது. அப்படி இருந்திருந்தால் நடவடிக்கை எடுத்திருப்போம். அதன் கட்டணத்தைக் கட்டுப்படுத்த முடியாது. இருந்தாலும், மக்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக அரசு கண்காணித்து நடவடிக்கை எடுக்கிறது. அரசு பேருந்துகள், ஏசி, கழிவறை உள்ளிட்ட வதிகளுடன் இருக்கிறது. மக்கள் அவற்றை பயன்படுத்த வேண்டும். இவை வேண்டாம் என ஆம்னி பேருந்துகளில் செல்பவர்களை ஒன்றும் சொல்ல முடியாது"

இவ்வாறு அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x