Published : 09 Jan 2020 07:20 AM
Last Updated : 09 Jan 2020 07:20 AM

மத்திய, மாநில விருதுகளை வென்று ஊராட்சிகளுக்கு உதாரணமாக திகழ்ந்த ஓடந்துறை: 20 ஆண்டுகால சேவைக்கு கிடைத்த பரிசு தோல்வி?

கோவை

நாட்டில் சில ஊராட்சிகள் மட்டும் எல்லா வகையிலும் தன்னிறைவு பெற்று, உதாரணமாய்த் திகழ் கின்றன. அந்த வகையில், சர்வ தேச அளவில் பாராட்டுகளும், விருதுகளும் பெற்று தமிழகத் துக்கே பெருமை சேர்த்தது கோவை மாவட்டத்தில் உள்ள ஓடந்துறை ஊராட்சி. கடந்த 20 ஆண்டுகளாக இவ்வூராட்சியின் மேம்பாட்டுக் காக உழைத்த முன்னாள் தலை வர் சண்முகம், இந்த தேர்தலில் தோல்வியைத் தழுவினார்.

கோவை மாவட்டம் காரமடை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 17 ஊராட்சிகளில் ஓடந்துறை ஊராட்சியும் ஒன்று. அண்மையில் முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்த லில், ஓடந்துறை ஊராட்சித் தலை வர் பதவிக்கு, முன்னாள் தலைவர் சண்முகம் அதிமுக சார்பிலும், தங்கவேல் என்பவர் திமுக சார் பிலும் போட்டியிட்டனர். இந்த தேர்த லில் சண்முகம் 67 வாக்குகள் வித்தியாசத்தில் தங்கவேலிடம் தோற்றுப்போனார்.

முன்மாதிரி கிராமமாக மாற்றியவர்

ஓடந்துறை ஊராட்சியில் தொடர்ந்து பத்தாண்டுகள் தலைவ ராக இருந்தவர் சண்முகம். இந்த ஊராட்சி பெண்களுக்கு ஒதுக் கப்பட்டபோது, இவரது மனைவி லிங்கம்மாளும் 10 ஆண்டுகள் ஊராட்சித் தலைவராகப் பொறுப்பு வகித்துள்ளார்.

பத்தாம் வகுப்புகூட தாண் டாத சண்முகம், ஓடந்துறை கிராமத் தையே முன்மாதிரிக் கிராமமாக மாற்றியவர். `இந்து தமிழ்’ செய்தி யாளரிடம் அவர் கூறியதாவது:

1996-ல் நான் முதல்முறையாக தேர்ந்தெடுக்கப்பட்ட போது, ஊராட்சியில் உள்ள 9 கிராமங் களில், ஒரு கிராமத்தில் மட்டும்தான் குடிநீர் வசதி இருந்தது. நான் பதவி யேற்ற ஓராண்டிலேயே 8 ஆழ் குழாய்க் கிணறுகளும், 8 குடிநீர்த் தொட்டிகளும் அமைத்தேன். பின்னர், பவானி ஆற்று நீரை சுத்தி கரித்து வழங்க முடிவு செய்தேன்.

1999-ல் தேசிய கிராமப்புற குடிநீர் திட்டத்தை மத்திய அரசு அறிமுகம் செய்தபோது, மக்கள் பங்களிப்புடன் அந்த திட்டத்தை ஓடந்துறையில் செயல்படுத்தி னேன். இந்தியாவிலேயே முதல் முறையாக ஓடந்துறையில்தான் இந்த திட்டத்துக்கு அடிக்கல் நாட் டப்பட்டது. அத்தனை கிராமங் களுக்கும் 24 மணி நேரமும் சுகா தாரமான குடிநீர் வழங்கப்பட்டது. 14 கிலோ மீட்டர் தொலைவுக்கு தார் சாலைகளும், மழைநீர் வடிகால்களும் அமைக்கப்பட்டன.

இப்பகுதியைச் சேர்ந்த மலை வாழ் மக்களுக்கு கான்கிரீட் வீடு கட்டித்தர முயற்சித்தேன். 5 ஆண்டுகளில் ஏறத்தாழ 650 வீடுகள் கட்டப்பட்டன. ஏறத்தாழ குடிசை இல்லாத ஊராட்சியாக ஓடந்துறை மாறியது. சோலார் விளக்கு, கழிப்பிடம் என அனைத்து வசதிகளும் செய்யப்பட்டன.

எனது சொந்த பணத்தில் 2 ஏக்கர் நிலம் வாங்கி, 58 வீடுகள் கட்டித் தந்தேன். 2014-ல் 101 பசுமை வீடுகள் கட்டித் தரப்பட்டன.

தொடர்ந்து, கிராம சேமிப்பு மற்றும் வங்கிக் கடனுதவி பெற்று காற்றாலை நிறுவினேன். 350 கிலோ வாட் மின்சாரம் தயாரிக்கப்பட்டு, ஊராட்சிப் பகுதிகளில் பயன் படுத்தப்பட்டது.

தன்னிறைவு பெற்ற கிராமம் என்ற வகையில், மத்திய, மாநில அரசுகளின் விருதுகள் கிடைத்தன. கனடா நாட்டின் டொரோண்டோ பல்கலைக்கழகத்தின் அழைப்பின் பேரில் அங்கு சென்று, உள்ளாட்சி அமைப்பின் மகத்துவம் குறித்து பேசினேன். முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் நேரடி யாக விருது வழங்கி கவுரவித்தார்.

ரூ.10 கோடிக்கு மேல் வருவாய் உள்ள ஊராட்சிகளில்கூட செய்ய முடியாத பணிகளை, ஓடந்துறை ஊராட்சியில் செயல்படுத்தினோம். ஆனாலும், அண்மையில் நடை பெற்ற உள்ளாட்சித் தேர்தலில் தோல்வியைத் தழுவினேன். மக்களின் மனப்போக்கு வேதனை யளிக்கிறது. நன்றி, விசுவாசம் போன்றவற்றுக்கு எல்லாம் அர்த்தம் இல்லாமல் போய்விட்டது. ரூ.1,000, ரூ.1,500 பணம் வாங்கிக் கொண்டு வாக்களிக்கும் போக்கு தொடருவது ஜனநாயகத்துக்கு ஆபத்தானது. மக்கள் நலனுக்காக கடுமையாய் உழைப்பவர்களை இதுபோன்ற தோல்வி, வேதனையையும், மன உளைச்சலையும் உண்டாக்கும்.

உள்ளாட்சி அமைப்புகளில் நேர் மையாக , சிறப்பாகச் செயல்படக் கூடிய பிரதிநிதிகளால்தான் கிராமங் களை முன்னேற்றத்தை முன்னெ டுக்க முடியும். அப்போதுதான் மகாத்மாவும், அப்துல் கலாமும் கண்ட கனவு பலிக்கும். இதை மக்கள் உணர வேண்டியது அவசி யம். இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x