Published : 09 Jan 2020 06:58 AM
Last Updated : 09 Jan 2020 06:58 AM

மெரினா கடற்கரை பகுதிகளில் பிளாஸ்டிக் பயன்பாடு அறவே கூடாது: மாநகராட்சிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

மெரினாவில் உள்ள கலங்கரை விளக்கம் முதல் பட்டினப்பாக்கம் வரை உள்ள லூப் சாலையில் நடைபாதை அமைக்க திட்டமிடப் பட்டுள்ளதாக உயர் நீதிமன்றத்தில் மாநகராட்சி தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதையடுத்து மெரினாவில் பிளாஸ்டிக் பயன்பாடு அறவே இருக்கக் கூடாது என மாநகராட்சிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை மெரினா கடற்கரை பகுதியில் மீன் வியாபாரிகள் மற்றும் நடைபாதை வியாபாரி களை ஒழுங்குபடுத்தி மெரினாவை அழகுபடுத்துவது தொடர்பான வழக்கு விசாரணை நேற்று நீதிபதிகள் வினீத் கோத்தாரி, ஆர். சுரேஷ்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வில் நடந்தது.

அப்போது மாநகராட்சி ஆணை யர் கோ.பிரகாஷ் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், ‘‘மெரினா கடற்கரையில் தற்போது 962 நடைபாதை கடைகள் இயங்கி வருகின்றன. அவற்றை ஒழுங்கு படுத்தும் வகையில் ரூ.27 கோடி செலவில் 7 அடி நீளம் 3 அடி அகலத் துக்கு ஒரே மாதிரியான 900 கடை களை மாநகராட்சியே அமைத்துக் கொடுத்து அந்தக் கடைகளின் வியாபாரிகளுக்கு ஸ்மார்ட் கார்டு கள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

கலங்கரை விளக்கம் அருகில் உள்ள 2 ஏக்கரி்ல் ரூ.66 லட்சம் செலவில் 300 தற்காலிக மீன் மார்க்கெட் அமைத்துக் கொடுக் கப்படவுள்ளது. கடற்கரை ஒழுங்கு முறை ஆணையத்திடம் உரிய அனுமதி பெற்று அதன்பிறகு நிரந்தர மீன் அங்காடி அமைக்கப்படும். கலங்கரை விளக்கம் முதல் பட்டினப்பாக்கம் வரை நடைபாதை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கும் கடற்கரை ஒழுங்குமுறை ஆணையத்திடம் அனுமதி கோரப் பட்டுள்ளது, என தெரிவிக்கப் பட்டிருந்தது.

அதையடுத்து இதுதொடர்பாக கடற்கரை ஒழுங்குமுறை ஆணை யம் மாநகராட்சியின் விண்ணப் பத்தை பரிசீலிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், மெரினாவில் பிளாஸ்டிக் பயன்பாடு அறவே இருக்கக் கூடாது என எச்சரித்தும், பிளாஸ்டிக் பயன்படுத்தப்பட வில்லை என்பதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தினர். மேலும், புதிதாக அமைக்கப்படவுள்ள கடைகள் மற்றும் அவற்றின் வடிவமைப்பு, உரிமம் தொடர்பாக மாநகராட்சி தரப்பில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும், என உத்தரவிட்டு விசாரணையை வரும் ஜன.22-க்கு தள்ளி வைத்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x