Published : 08 Jan 2020 09:43 PM
Last Updated : 08 Jan 2020 09:43 PM

கயத்தாறு அருகே ஊராட்சி வார்டு உறுப்பினருக்கான வாக்கு எண்ணிக்கையை நிறுத்தக்கோரி வேட்பாளர் போராட்டம்

கயத்தாறு ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட வடக்கு இலந்தைகுளம் 3-வது வார்டு உறுப்பினர் பதவிக்கான வாக்கு எண்ணிக்கையை நிறுத்தி வைக்க வலியுறுத்தி வேட்பாளர் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

கயத்தாறு ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கான தேர்தல் கடந்த 30-ம் தேதி நடந்தது. இதற்கான வாக்கு எண்ணிக்கை கடந்த 2-ம் தேதி நடந்தது. இதில், கயத்தாறு ஊராட்சி ஒன்றியம் வடக்கு இலந்தைகுளம் ஊராட்சி 3-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு வீரபத்திரன் மனைவி உமா, சங்கையா பாண்டி மனைவி வள்ளித்தாய் ஆகியோர் போட்டியிட்டனர்.

வேட்புமனு பரிசீலினையின்போது வாக்காளர் பட்டியலில் உமா மற்றும் அவரது கணவர் வீரபத்திரன் ஆகியோர் பெயர்கள் வடக்கு இலந்தைகுளம் ஊராட்சியில் இருந்தன. ஆனால், கடந்த 23-ம் தேதி வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலில் இவர்களது பெயர் கயத்தாறு டவுன் பஞ்சாயத்தில் சேர்க்கப்பட்டிருந்தன.

இதன் காரணமாக கடந்த 2-ம் தேதி நடந்த வாக்கு எண்ணிக்கையின்போது, வடக்கு இலந்தைகுளம் ஊராட்சி 3-வது வார்டில் பதிவான வாக்குகள் மட்டும் வகை பிரிப்பு செய்து வேட்பாளர்கள் மற்றும் அவர்களது முகவர்கள் முன்னிலையில் தனி வாக்கு பெட்டியில் வைத்து சீலிடப்பட்டது

இந்நிலையில், தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து இன்று (ஜன 8) வடக்கு இலந்தைகுளம் ஊராட்சி 3-வது வார்டில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி கயத்தாறு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடந்தது.

அப்போது இந்த வார்டில் போட்டியிட்ட வள்ளித்தாய், அலுவலக வாயில் முன் அமர்ந்து திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். கடந்த 23-ம் தேதி வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலில் வேட்பாளர் உமாவின் பெயர் நீக்கம் செய்யப்பட்டுள்ளது.

எனவே, உமாவை தகுதி நீக்கம் செய்து, என்னை வெற்றி வேட்பாளராக அறிவிக்க வேண்டும். இல்லையென்றால் வாக்கு எண்ணிக்கையை நிறுத்த வேண்டும் என வலியுறுத்தி வள்ளித்தாய் கோஷங்கள் முழங்கினார்.

தகவல் அறிந்து கயத்தாறு காவல் ஆய்வாளர் (பொறுப்பு) முத்துலட்சுமி அங்கு வந்து, கோரிக்கையை மனுவாக அதிகாரியிடம் கொடுக்கும்படி கூறினார். இதையடுத்து வள்ளித்தாய் தேர்தல் நடத்தும் அலுவலர் சீனிவாசனிடம் மனு வழங்கினார். மனுவை பெற்றுக்கொண்ட அவர், தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.

ஆனால், வாக்கு எண்ணிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து வள்ளித்தாய் வெளிநடப்பு செய்தார். இதையடுத்து வாக்கு எண்ணிக்கைக்கான நோட்டீஸ் வேட்பாளர் வள்ளித்தாய் வீட்டில் ஒட்டப்பட்டது. அதன் பின்னர் வாக்கு பெட்டி போலீஸ் பாதுகாப்புடன் கயத்தாறு கருவூலத்திலிருந்து கொண்டு வரப்பட்டு தேர்தல் நடத்தும் அலுவலர் சீனிவாசன் முன்னிலையில் மதியம் 3 மணிக்கு வாக்கு எண்ணிக்கை நடந்தது.

இதில், மொத்தம் 157 வாக்குகள் பதிவாகியிருந்தன. வேட்பாளர் உமா 118 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட வள்ளித்தாய் - 28 வாக்குகள் பெற்றனர். 11 வாக்குகள் செல்லாதவையாகும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x