

ஜனவரி 15-ம் தேதி பொங்கல் பண்டிகைக்காக நிலங்களில் இருந்து பனங்கிழங்குகளை எடுக்கும் பணியில் தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையைக் கொண்டாடும் விதமாக விவசாயிகள் தங்களது நிலங்களில் விளைவித்த பயிர்களை அறுவடை செய்ய அவற்றுக்கு பூஜை செய்து, பணிகளைத் தொடங்குவார்கள். பூஜையில், நெல் மணிகள், காய்கறிகள், மஞ்சள் குலை ஆகியவற்றுடன் பனங்கிழங்கும் பிரதானமாக இடம்பெற்றிருக்கும்.
தமிழகத்தின் மாநில மரமான பனை மரத்தின் பாகங்களில், சிறு துரும்பு கூட வீணாகாமல் மனிதருக்கு பயன்படுகிறது. அதில், பதநீர், நுங்கு, கருப்பட்டி, பனங்கற்கண்டு, ஓலை, பனங்கட்டைகள் என அனைத்தும் பயன்பட்டு வருகிறது. இதில், நுங்கு பருவம் கடந்துவிட்டால், அது பனம் பழமாக மாறி, அதையும் சாப்பிடலாம்.
எட்டயபுரம் அருகே தாப்பாத்தி, அயன்வடமலாபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் சுமார் 50 ஆயிரம் பனை மரங்கள் உள்ளன. இங்கு ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாத கடைசியில் பனை விதைகளை தனித்தனியாக பிரித்து, குறுமணல் பகுதியில் தொழிலாளர்கள் புதைத்து வைப்பார்கள். புரட்டாசி மாதத்தில் பெய்யும் மழையில் ஈரப்பதம் ஏற்பட்டு, விதை முளைத்து, பனங்கிழங்காக மாறும்.
பொங்கல் பண்டிகைக்கு இன்னும் 7 நாட்களே உள்ள நிலையில், நிலங்களில் இருந்து பனங்கிழங்குகளை தோண்டி எடுக்கும் பணியில் பனை தொழிலாளர்கள் தீவிரமாக உள்ளனர். பனங்கிழக்கு திரட்சியாக உள்ளதால், கடந்த ஆண்டை விட கூடுதலாக விலை போகிறது. கடைகளில் 25 எண்ணம் கொண்ட ஒரு பனங்கிழங்கு கட்டு ரூ.200-க்கு விற்பனையாகி வருகிறது. இதனால், தொழிலாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
இதுகுறித்து எட்டயபுரம் அருகே தாப்பாத்தியை சேர்ந்த பூ.ஜெயராஜ் கூறும்போது, அனைத்து குணங்களும் ஒருங்கே பெற்ற பனமரத்தில் இருந்து பெறப்படும் விதைகள் மூலமே பனங்கிழங்குகள் கிடைக்கின்றன.
கடந்த ஆண்டு புரட்டாசியில் சரிவர மழையில்லாததால், நாங்கள் தான் தண்ணீர் கொண்டு வந்து ஊற்றினோம். இதனால் கிழங்குகள் திரட்சி குறைவாக இருந்தன. இதனால் ஒரு பனங்கிழங்கு ரூ.3-க்கு தான் விலை போனது. ஆனால், நடப்பாண்டு பெய்த நல்ல மழை காரணமாக கிழங்குகள் நன்றாக காணப்படுகிறது.
எனவே ஒரு கிழங்கு ரூ.5 வரை கொடுத்து வியாபாரிகள் வாங்குகின்றனர். பனங்கிழங்கு என்ற இதனை சாதாரணமாக கூற முடியாது. இதனை எடுக்காமல் அப்படியே விட்டால் பனை மரமாக வளர்ந்து, சுமார் 12 ஆண்டுகளில் அனைத்து பலன்களை கொடுக்கும், என்றார் அவர்.
இதுகுறித்து ஜெ.ஐகோர்ட்ராஜா கூறுகையில், கரிசல் மண், செவல் மண் பகுதியில் விதைக்கப்படும் பன விதைகளால் அதிகளவு ஊடுருவி செல்ல முடியாது. மேலும், அங்கு விளையும் பனங்கிழங்குகளில் நார் இருக்காது. இதனால் சுவை குறைவாக தான் இருக்கும். அதே வேளையில், இப்பகுதியில் குருமணலில் விதைப்பால், நன்றாக ஊடுருவி சென்று பனங்கிழங்கு மிகப்பெரிதாக இருக்கும். இவைகளில் நார் இருப்பதால் சுவை மிகுதியாக இருக்கும், என்றார்.