Published : 08 Jan 2020 05:21 PM
Last Updated : 08 Jan 2020 05:21 PM

சிறந்த நல்லாட்சியில் தமிழகம் முதலிடம்; செயற்கையான குறியீடு என ஸ்டாலின் விமர்சனம்: முதல்வர் பழனிசாமி விளக்கம்

முதல்வர் பழனிசாமி - மு.க.ஸ்டாலின்: கோப்புப்படம்

சென்னை

சிறந்த நல்லாட்சிக்கான குறியீட்டில் தமிழ்நாட்டை முதல் மாநிலமாக மத்திய அரசு தேர்வு செய்தது குறித்து, முதல்வர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் விளக்கம் அளித்தார்.

தமிழக சட்டப்பேரவையில் 2020-ம் ஆண்டுக்கான கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்று (ஜன.8) ஆளுநர் உரை மீதான விவாதத்தின்போது, சிறந்த நல்லாட்சிக்கான பல்வேறு குறியீடுகளில் தமிழ்நாட்டை முதல் மாநிலமாக மத்திய அரசு தேர்வு செய்தது 'செயற்கையான குறியீடு' என எதிர்க்கட்சித் தலைவரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் விமர்சித்தார்.

அதற்கு முதல்வர் பழனிசாமி, விளக்கமளித்துப் பேசியதாவது:

"எல்லா துறைகளையும் கணக்கிட்டுத்தான் சிறந்த நல்லாட்சியில் முதலிடத்தைக் கொடுத்திருக்கின்றனர். எல்லாவற்றிலும் முதன்மையாக வருவதற்கில்லை. 25.12.2019 அன்று நல் ஆளுமை தினத்தை முன்னிட்டு, மத்திய இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் வெளியிட்ட நல் ஆளுமைக் குறியீட்டில் தமிழக அரசு முதல் இடம் பெற்றுள்ளது. தமிழக மக்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள், அரசுத் துறை அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள் ஆகியோரின் முயற்சியாலும், கடின உழைப்பாலும் இந்த நிலை எட்டியிருக்கின்றது.

வேளாண்மை, வர்த்தகம் மற்றும் தொழில்துறை, மனிதவள மேம்பாடு, பொது சுகாதாரம், உட்கட்டமைப்பு வசதிகள், பொருளாதார ஆளுமை, சமூக நலம் மற்றும் சமூக வளர்ச்சி, நீதி மற்றும் பாதுகாப்பு, சுற்றுச்சூழல், மக்களை மையமாகக் கொண்ட நிர்வாகம், சேவை சட்டங்களை மாநிலத்தில் நடைமுறைப்படுத்துதல், உதாரணமாக ஆட்சியை கணினி மற்றும் மொபைல் போன் மூலம் செயல்படுத்தப்படும் அரசின் பணிகள், உதாரணமாக உழவன் செயலி, காவலன் செயலி, இ-சேவை மையம், ஒற்றைச் சாளர முறை போன்றவை, என மொத்தம் 10 பிரிவுகளில், 50 தரவுகளை ஆய்வு செய்து இந்தக் குறியீடு வெளியிடப்பட்டுள்ளது.

இந்த ஆய்வின் அடிப்படையில் தான், இந்த தரவரிசைப் பட்டியலில் தமிழ்நாடு முதலிடம் வகித்தது. இதனை வெளியிட்டுள்ள நிர்வாகச் சீர்திருத்தம் மற்றும் பொது குறைதீர் துறையானது பிரதமரின் நேரடிக் கட்டுப்பாட்டில் இயங்கும் மத்திய அரசுத் துறையாகும். இத்துறை தான் பிரதம மந்திரி விருது, மின் ஆளுமை விருதுகளைப் பல ஆண்டுகளாக வழங்குகின்றன. இதில் இடம் பெறுகின்ற அமைப்புகள் எல்லாம் இந்த விருதுகளைத் தேர்வு செய்கின்ற அமைப்புகள்.

இந்திய ரிசர்வ் வங்கி, இந்திய மக்கள்தொகை கணக்கெடுப்பு நிறுவனம், தேசிய குற்ற ஆவணக் காப்பகம், தேசிய குடும்ப நலக் கணக்கெடுப்பு, மத்திய அரசின் புள்ளிவிவரம் ஆண்டு புத்தகம், தேசிய மாதிரி கணக்கெடுப்பு, இந்திய பொது நிதி புள்ளிவிவரங்கள், கல்விக்கான மாவட்டத் தகவல் அமைப்பு போன்ற அதிகாரபூர்வமான, நம்பத்தகுந்த மத்திய அரசுத் துறை புள்ளி விவரங்கள் மற்றும் பல்வேறு அரசுத் துறைகளின் ஆய்வறிக்கைகள் ஆகியவை ஆய்வு செய்து இக்குறியீடு வெளியிடப்பட்டுள்ளது. மேற்கூறிய, இந்தியாவின் தலைசிறந்த நிறுவனங்களின் புள்ளிவிவரங்கள் செயற்கையானதா? என்பதை எதிர்க்கட்சித் தலைவர் எண்ணிப் பார்க்க வேண்டும்.

இக்குறியீட்டின் உட்பிரிவுகளான நீதி மற்றும் பாதுகாப்பு, உட்கட்டமைப்பு ஆகிய பிரிவுகளில் தமிழ்நாடு முதலிடமும், பொது சுகாதாரத்தில் இரண்டாவது இடமும் பிடித்துள்ளது. சுற்றுச்சூழலில், மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது. மனிதவள மேம்பாட்டில் மற்றும் பொருளாதார ஆளுமையில் தமிழ்நாடு ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளது.

எதிர்க்கட்சித் தலைவர் கூறியதைப் போல, இது செயற்கையான குறியீடு என்றால், எல்லா தரவுகளிலும் தமிழ்நாடு முதலாவதாக வந்திருக்கும். அப்படி அல்ல. எல்லா தரவுகளையும் கணக்கிட்டுத்தான், அதில் ஒவ்வொன்றுக்கும் ஒரு மதிப்பெண் கொடுக்கிறார்கள். அந்த மதிப்பெண் அடிப்படையில்தான், தரவரிசையில் தமிழகம் முதலிடம் வகித்துள்ளது.

திமுகவுடன் கூட்டணியில் உள்ள காங்கிரஸ், புதுச்சேரியில் ஆட்சி அமைத்துள்ளது. நல் ஆளுமைக்கான குறியீட்டில், புதுச்சேரி யூனியன் பிரதேசங்களில் முதலிடத்தைப் பெற்றுள்ளது. இதில் இருந்தே, எந்தவித விருப்பு, வெறுப்பின்றி, உள்ளது உள்ளபடியே நல் ஆளுமைக் குறியீடு மத்திய அரசால் வெளியிடப்பட்டு உள்ளது எனத் தெளிவாகிறது. அதேபோல புதுச்சேரியும் அப்படித்தான், புள்ளிவிவரத்தின்படி தான் அவர்கள் மதிப்பெண்ணைக் கொடுத்துத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள்.

ஏற்கெனவே, ஆங்கில இதழும் இதனைத் தெரிவித்தது.

சர்வதேச நிறுவனமாகிய பிராஸ்ட் அண்ட் சல்லிவன் தொடர்ந்து மூன்றாவது முறையாக வளர்ச்சி, புத்தாக்கம் மற்றும் தலைமைப் பண்பு குறியீட்டில் இந்தியாவிலேயே இரண்டாவது சிறந்த மாநிலமாக தமிழ்நாட்டைத் தேர்வு செய்துள்ளது.

தேசிய பொருளாதார ஆய்வு நிறுவனத்தின் ஆய்வறிக்கை, பொது விவகாரங்கள் குறியீடு உள்ளிட்ட பல்வேறு அரசு சாரா அமைப்புகளும், தமிழ்நாட்டை இந்தியாவின் இரண்டாவது சிறந்த மாநிலமாகவும், நல் ஆளுமை மற்றும் சட்டம் ஒழுங்கு பராமரிப்பு உள்ளிட்ட பல்வேறு இனங்களில் முதல் மாநிலமாகவும் அறிவித்துள்ளன.

மத்திய அரசின் பல்வேறு துறை புள்ளிவிவரங்களையும் ஆராய்ந்து, மத்திய அரசால் வெளியிடப்பட்ட இந்த நல் ஆளுமைக் குறியீடும், பல்வேறு இந்திய மற்றும் சர்வதேச நிறுவனங்களின் ஆய்வு முடிவுகளைப் போலவே தமிழக அரசால் தமிழ்நாடு பெற்றுள்ள பல்துறை வளர்ச்சியைப் உரக்கப் பறைசாற்றும் விதமாக அமைத்துள்ளது".

இவ்வாறு முதல்வர் பழனிசாமி பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x