

போகி பண்டிகையின்போது டயர், பிளாஸ்டிக் பொருட்களை எரிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் தெரிவித்துள்ளார்.
சென்னை, கிண்டியில் இன்று (ஜன.8), மாசு கட்டுப்பாடு வாரியம் சார்பில், போகி பண்டிகையின்போது மக்கள் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்த பிரச்சாரத் தொடக்க விழா நடைபெற்றது. அப்போது, விழிப்புணர்வு பிரச்சார வாகனங்களை அமைச்சர் கருப்பணன் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.
இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கே.சி.கருப்பணன், போகி பண்டிகையின்போது காற்று மாசுக்கு வழிவகுக்கக்கூடிய பிளாஸ்டிக் பொருட்கள், பழைய டயர்கள், பழைய டியூப்களை எரிக்கக் கூடாது என்றும், மீறி அவற்றை எரிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
முன்னதாக, நிகழ்ச்சியில் பேசிய சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், சென்னையில் மாசு ஏற்படுத்தும் வகையிலான பொருட்களை எரிப்பவர்களைக் கண்டறிய குழுக்கள் அமைக்கப்பட்டிருப்பதாகவும், அவர்கள் தொடர் கண்காணிப்பில் ஈடுபடுவார்கள் என்றும் கூறினார்.