

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (இஸ்ரோ) சார்பில் புதிய ராக்கெட் ஏவுதளம் சுமார் 2,200 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்படுகிறது.
இதற்கான நிலம் எடுப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்த பணிகளை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
விண்வெளி ஆராய்ச்சி துறையில் இந்தியா உலகநாடுகளில் முன்னணி நாடாக வேகமாக வளர்ந்து வருகிறது. சொந்த நாட்டு செயற்கைகோள்களை மட்டுமின்றி பல்வேறு வெளிநாடுகளை சேர்ந்த செயற்கைகோள்களையும் இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ விண்ணில் செலுத்தி வருகிறது. பல நாடுகள் தொடர்ந்து செயற்கைகோள்களை ஏவ இஸ்ரோவை நாடி வருகின்றன.
இதன் காரணமாக இஸ்ரோவுக்கு கூடுதல் ராக்கெட் ஏவுதளம் தேவைப்படுகிறது. ஏற்கனவே ஸ்ரீஹரிகோட்டா ஏவு தளத்தில் இருந்து இஸ்ரோ ராக்கெட்டுகளை ஏவி வருகிறது. தேவை அதிகரித்துள்ளதால் ஸ்ரீஹரிகோட்டாவை தாண்டி வேறு இடங்களிலும் ராக்கெட் ஏவுதளங்களை அமைக்க இஸ்ரோ முடிவு செய்தது.
ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்கான உகந்த இடத்தை தேடும் பணியில் இஸ்ரோ ஈடுபட்டது. நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் ஆய்வுகள் நடத்தப்பட்டன. பொதுவாக ராக்கெட் ஏவுதளம் அமையும் இடமானது, காற்றின் வேகம் மணிக்கு 30 கிலோ மீட்டருக்கு குறைவாகவும், குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகாத பகுதியாகவும், புயல், மின்னல் மற்றும் மழையின் தாக்கம் குறைவாக உள்ள பகுதிகளாக இருக்க வேண்டும். நிலையான காலநிலையும், நல்ல வெளிச்சம், குறைந்த பனி மற்றும் மேகமூட்டம் உள்ள பகுதியாக இருக்க வேண்டும்.
அந்த வகையில் தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் கடற்கரை பகுதி பூகோள ரீதியாக ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்கு உகந்த இடமாக கண்டறியப்பட்டது. இதையடுத்து குலசேகரன்பட்டினம் பகுதியில் புதிய ராக்கெட் ஏவுதளத்தை அமைக்க இஸ்ரோ முடிவு செய்தது. இதற்கு தேவையான இடத்தை கையகப்படுத்தி தருமாறு தமிழக அரசிடம் இஸ்ரோ சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
அதன்பேரில் இஸ்ரோவுக்கு வழங்க குலசேகரன்பட்டினம் பகுதியில் 2,233 ஏக்கர் நிலம் அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்த நிலங்களை கையகப்படுத்தும் பணிகளை தமிழக அரசு தீவிரப்படுத்தியுள்ளது. இதற்காக தனியாக மாவட்ட வருவாய் அலுவலர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் 8 வட்டாட்சியர்களும், தேவையான சர்வேயர்களும் நியமிக்கப்பட்டு நிலம் எடுப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்த பணிகளை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். முதலில் திருச்செந்தூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்கான நிலம் எடுப்பு தொடர்பான ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தலைமையில் நடைபெற்றது. தொடர்ந்து தொடர்ந்து மாதவக்குறிச்சி கூடல்நகர் பகுதியில் ராக்கெட் ஏவுதளம் பகுதியில் ராக்கெட் ஏவும் இடம் அமையவுள்ள இடத்தை நேரில் பார்வையிட்டார்.
பின்னர் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி செய்தியாளர்களிடம் கூறியதாவது: தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் பகுதியில் சுமார் 2,200 ஏக்கர் பரப்பளவில் இஸ்ரோ சார்பில் ராக்கெட் ஏவுதளம் அமைக்க நில எடுப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.
திருச்செந்தூர் வட்டம் மாதவக்குறிச்சி கூடல்நகர் பகுதியில் 6 வட்டாட்சியர்கள் தலைமையிலும், சாத்தான்குளம் வட்டம் பள்ளக்குறிச்சி மற்றும் படுக்கப்பத்து பகுதியில் 2 வட்டாட்சியர்கள் தலைமையிலும் நில கணக்கெடுப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
மாதவக்குறிச்சி கூடல்நகர் பகுதியில் மட்டும் 25 குடியிருப்புகள் உள்ளன. குடும்ப அட்டை இல்லாத குடியிருப்புதாரர்களுக்கும் இழப்பீடு வழங்க ஏதுவாக குடும்ப அட்டை வழங்கிட உடனடியாக நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், இப்பகுதியில் உள்ள தென்னை, பனை மற்றும் பலன் தரும் மரங்களையும் கணக்கீடு செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. நில எடுப்பு பணிகளை அரசு விதிமுறைகளின்படி விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு தேவையான சர்வேயர்கள், டிராப்ட்மேன்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்றார் ஆட்சியர்.
ஆய்வின் போது, கூடுதல் ஆட்சியர் (வருவாய்) விஷ்ணு சந்திரன், மாவட்ட வருவாய் அலுவலர் (நிலம் எடுப்பு) ஜெயராஜ், திருச்செந்தூர் வருவாய் கோட்டாட்சியர் தனப்ரியா மற்றும் இஸ்ரோ அலுவலர்கள், நில எடுப்பு வட்டாட்சியர்கள், சர்வேயர்கள் உடனிருந்தனர்