Published : 08 Jan 2020 09:29 AM
Last Updated : 08 Jan 2020 09:29 AM

`தி இந்து' குழுமத்தின் `தமிழ் திசை' பதிப்பகம் சார்பில் ‘பரம்பிக்குளம்-ஆழியாறு பாசன திட்ட வரலாறு’ நூல் வெளியீடு

`தி இந்து’ குழுமத்தின் `தமிழ் திசை’ பதிப்பகம் சார்பில் `ஆசியாவின் பொறி யியல் அதிசயம் பரம்பிக்குளம்-ஆழியாறு பாசனத் திட்ட வரலாறு’ என்ற நூல் வெளியீட்டு விழா பொள்ளாச்சியில் நடைபெற்றது. கவிஞர் சிற்பி நூலை வெளியிட, தென்னிந்திய சாகுபடியாளர்கள் சங்கத் தலைவர் டி.ஏ.கிருஷ்ணசாமி பெற்றுக் கொண்டார். உடன், பொள்ளாச்சி தமிழிசை சங்கச் செயலர் ஜி.டி.கோபால கிருஷ்ணன், நூலாசிரியர் எஸ்.கோபு.

`தி இந்து’ குழுமத்தின் `தமிழ் திசை’ பதிப்பகம் சார்பில் `ஆசியாவின் பொறியியல் அதிசயம் பரம்பிக்குளம் ஆழியாறு பாசனத் திட்ட வரலாறு’ என்ற நூல் வெளியீட்டு விழா பொள்ளாச்சியில் நடைபெற்றது.

பொள்ளாச்சி தொழில் வர்த்தக சபை அரங்கில் நடைபெற்ற விழாவில், `இந்து தமிழ்’ பொள்ளாச்சி செய்தியாளர் எஸ்.கோபு எழுதிய இந்நுலை சாகித்ய அகாடமி விருது பெற்ற கவிஞர் சிற்பி வெளியிட்டு பேசியதாவது:

தமிழகம் தாகம் மிகுந்த மண். இங்கு பாயும் ஆறுகள் ஒன்வொன்றாக வறண்டுபோய் வருகின்றன. இன்னும் 25 ஆண்டுகளில் காவிரி ஓடிய தடம் மட்டும்தான் இருக்கும். எனவே, தண்ணீரின் மகத்துவம், சேமிப்பின் முக்கியத்துவத்தை இளைய தலைமுறை அறிந்துகொள்ள வேண்டும். வீணாக ஓடிக் கொண்டிருந்த தண்ணீரை சேமித்து, முறைப்படி விநியோகிக்க உருவாக்கப்பட்ட திட்டங்களில் உலக அளவில் சிறந்த திட்டம் பரம்பிக்குளம்-ஆழியாறு பாசனத் திட்டம்.

இத்திட்டத்தின் பிதாமகன் வி.கே.பழனிசாமி கவுண்டர். தொலைநோக்குப் பார்வை கொண்ட அன்றைய அரசியல்வாதிகள், திறமையான பொறியாளர்கள் மற்றும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் கூட்டுமுயற்சியே இந்ததிட்டம். 11 அணைகள், மலைகளைக் குடைந்து உருவாக்கப்பட்ட 8 சுரங்கங்கள், 4 நீர்மின் திட்டங்கள், 10 கால்வாய்கள், 50 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட சமமட்டக் கால்வாய் என கற்பனைக்கு எட்டாத திட்டம் உருவாகி, செயலுக்கு வந்த விதத்தை இந்தப் புத்தகம் மிகப் பிரமாதமாக வெளிப்படுத்தியிருக்கிறது. மகாபாரதம் போல, புதிய பாரதமான இது போன்ற நூல்களை இளைய தலைமுறை நிச்சயம் வாசிக்க வேண்டும் என்றார்.

நூலைப் பெற்றுக் கொண்ட தென்னிந்திய தென்னை சாகுபடியாளர்கள் சங்கத் தலைவர் டி.ஏ.கிருஷ்ணசாமி பேசும்போது, “பரம்பிக்குளம் - ஆழியாறு பாசனத் திட்டத்தால்தான், பொள்ளாச்சி, உடுமலை உள்ளிட்ட பகுதிகளில் தென்னை விவசாயம் செழித்தோங்கியது. இப்போதெல்லாம் விவசாயத்துக்கு ஆட்களே கிடைப்பதில்லை. இந்நிலை தொடருமானால், எதிர்காலத்தில் விவசாயம் செய்ய ஆட்களே இல்லாமல் போய்விடுவார்கள்” என்றார்.

பொள்ளாச்சி தமிழிசை சங்கச் செயலர் ஜி.டி.கோபாலகிருஷ்ணன், சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார். பொள்ளாச்சி இலக்கிய வட்டச் செயலர் கவிஞர் பூபாலன் விழாவைத் தொகுத்து வழங்கினார். `இந்து தமிழ்’ விநியோகப் பிரிவு முதுநிலை உதவி மேலாளர் பி.விஜயகுமார் நன்றி கூறினார்.

நூல் வாங்க...

`ஆசியாவின் பொறியியல் அதிசயம் பரம்பிக்குளம்-ஆழியாறு பாசனத் திட்ட வரலாறு' நூலின் விலை ரூ.100. தமிழ் திசை பதிப்பகம் வெளியிட்டுள்ள இப்புத்தகத்தை store.hindutamil.in/publications என்ற இணையதளத்தைப் பயன்படுத்தி ஆன்லைன் மூலமாக வாங்கலாம்.

அஞ்சல் அல்லது கூரியர் மூலமாகப் பெற `KSL MEDIA LIMITED' என்ற பெயரில் டி.டி. அல்லது காசோலையை `இந்து தமிழ் திசை நாளிதழ், கஸ்தூரி மையம், 124, வாலாஜா சாலை, சென்னை 600 002' என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். மணியார்டர் அனுப்பியும் புத்தகங்களைப் பெறலாம். கூடுதல் தகவல் அறிய 7401296562, 7401329402 ஆகிய எண்களில் தொடர்புகொள்ளலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x