Published : 08 Jan 2020 09:18 AM
Last Updated : 08 Jan 2020 09:18 AM

திருப்பூர் கிராமப் பகுதியில் சாட்டிலைட் ஃபோன் பயன்பாடு: மத்திய உளவுப் பிரிவு போலீஸார் தீவிர விசாரணை

கோப்புப் படம்

திருப்பூர் அருகே கிராமப்புற பகுதியில் சாட்டிலைட் ஃபோன் பயன்படுத்தப்பட்டதற்கான சிக்னல் தகவல்களை வைத்து, உளவுப் பிரிவு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்தியாவில் சாட்டிலைட் ஃபோன் (செயற்கைகோள் அலைபேசி) பயன்பாடு பரவலாக அனுமதிக்கப்படவில்லை. பாதுகாப்புத் துறை சார்ந்த விஷயங்களுக்கு மட்டுமே சாட்டிலைட் ஃபோன் பயன்பாடு அனுமதிக்கப்பட்டுள்ளது. சாட்டிலைட் ஃபோன் பயன்படுத்த மத்திய, மாநில அரசுகளிடம் உரிய அனுமதி பெற வேண்டும். அனுமதிக்கப்பட்டவர்கள் மட்டுமே இதைப் பயன்படுத்தமுடியும். உரிய அனுமதி இல்லாமல் வைத்திருப்போர்கூட, கைது நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.

மேலும், உள்நாட்டு பாதுகாப்பு விவகாரம் என்பதால், இதை மத்திய உளவுப் பிரிவு, சிறப்பு பிரிவு மற்றும் மாநில கியூ பிரிவினர் கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில், திருப்பூர் மாவட்டம் குன்னத்தூர் அருகே ஆதியூர் பகுதியில் சாட்டிலைட் ஃபோன் பயன்படுத்தப்பட்டதற்கான சிக்னல், சில தினங்களுக்கு முன்னர் கிடைத்தது. ஜிபிஎஸ் மூலமாக இடம் கண்டறியப்பட்டு, மத்திய உளவுத் துறை மற்றும் கியூ பிரிவு போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில், சாட்டிலைட் ஃபோன் பயன்படுத்திய நபர் குறித்து, உளவுத் துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இதுதொடர்பாக மத்திய உளவுத்துறை அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ‘மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்பு (டிஆர்டிஓ) மூலமாக தகவல் கிடைத்தது. குன்னத்தூர் தவிர, அருகே காங்கயம் பகுதியிலும் சாட்டிலைட் ஃபோன் பயன்படுத்தப்பட்டுள்ளது. பயன்படுத்தியவர்கள் யார் என்ற தகவலை விசாரித்து வருகிறோம்' என்றார்.

மத்திய சிறப்பு பிரிவு அதிகாரிகள் கூறும்போது, ‘தற்போதுள்ள சூழலில் தனிப்பட்ட நபர் அல்லது ஏதேனும் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், தடை செய்யப்பட்ட இயக்கத்தினர் பயன்படுத்தினரா என்பதில்தான் சந்தேகம்' என்றனர். கியூ பிரிவு அதிகாரிகளிடம் கேட்டபோது, 'உள்நாட்டு பாது காப்பு விவகாரம் என்பதால், தீவிரமாக விசாரிக்கப்பட்டு வருகிறது. மீனவர்களுக்கு வழங்கும் சாட்டிலைட் ஃபோன் என்பது, இதுபோன்று இருக்காது. கடலில் சாதாரண ஃபோன்களில் சிக்னல் கிடைக்காது என்பதால், அவசரகாலத்தில் மீனவர்கள் தகவல் தெரிவிக்க குறிப்பிட்ட சில வசதிகள் மட்டுமே அதில் இருக்கும்' என்றனர்.

மாவட்ட காவல் துறை அதிகாரிகள் தரப்பில் விசாரித்தபோது, ‘சில தினங்களுக்கு முன்னர், குன்னத்தூர் அருகே ஆதியூர் பகுதிக்கு சென்று கியூபிரிவு போலீஸார் மற்றும் அதிகாரிகள் விசாரித்துள்ளனர் என்பது உண்மை. விசாரணைக்கு பிறகு, அதுகுறித்து மாவட்ட காவல் துறைக்கு அவர்கள் தகவல் எதுவும் தெரிவிக்கவில்லை' என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x