சிறுபான்மையினருக்கு பாதிப்பு ஏற்படுமானால் தேசிய குடிமக்கள் பதிவேட்டை அதிமுக எதிர்க்கும்: சட்டப்பேரவையில் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் உறுதி

கோப்புப் படம்
கோப்புப் படம்
Updated on
1 min read

‘‘தேசிய குடிமக்கள் பதிவேட்டால் தமிழகத்தில் சிறுபான்மையினர் ஒருவர் பாதிக்கப்பட்டால்கூட முதல் எதிர்ப்பு குரலை அதிமுக எழுப்பும். அவர்கள் உரிமையை பாதுகாக்கும்’’ என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்

சட்டப்பேரவையில் ஆளுநர் உரை மீது நடைபெற்ற விவாதம்:

ஜெ.அன்பழகன் (திமுக): புதுக்கோட்டையில் அமைச்சர் முன்னிலையில், எம்எல்ஏ ஒருவர் சிறுபான்மையின அதிகாரியை திட்டுகிறார். உங்களுக்கு சிறுபான்மையினர் என்றாலே கசக்கிறது.

அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்: சிறுபான்மையினர் மெக்கா பயணத்துக்கு மத்திய அரசு நிதி நிறுத்தியபோது, தமிழக முதல்வர் வழங்கினார். சிறுபான்மையினர் மக்களை பாதுகாக்கும் அரசு இது.

எதிர்க்கட்சித்தலைவர் மு.க. ஸ்டாலின்: சிறுபான்மையினர் மெக்கா பயணத்துக்கு உதவியதை வரவேற்கிறேன். குடியுரிமை சட்டத்தால் சிறுபான்மையினருக்கு கொடுமை நிகழ்ந்துள்ளது. அதை எதிர்த்து வாக்களிக்க வேண்டிய நீங்கள் ஏன் ஆதரித்து வாக்களித்தீர்கள்.

அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்: குடியுரிமை சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இன்னும் அமல்படுத்தப்படவில்லை. கடந்த 2003-ம் ஆண்டு திமுக பங்கேற்றிருந்த பாஜக அரசில்தான் குடியுரிமை சட்டத்துக்கான அடிப்படை தொடங்கியது. கடந்த 30 ஆண்டுகள் ஆண்ட அதிமுக ஆட்சிக்காலத்தில் எந்தவொரு சிறுபான்மையினருக்காவது சிறு இழுக்கு ஏற்பட்டுள்ளது என்று கூற முடியுமா? இல்லாத ஒன்றை இட்டுக்கட்டிக் கூறி, தமிழகத்தில் பிரிவினையை ஏற்படுத்தி நாட்டை சீரழிக்க எதிர்க்கட்சிகள் முயற்சிக்கின்றன.

எதிர்க்கட்சி துணைத்தலைவர் துரைமுருகன்: குடியுரிமை சட்டத் திருத்தத்தைத் தான் நாங்கள் எதிர்க்கிறோம். அகதிகளாக வரும் மற்றவர்களை ஏற்கும்போது ஒரு மதத்தை மட்டும் ஒதுக்குவது ஏன்? எனவே, கேரளா அரசைப் போல் அவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.

ஆர்.பி.உதயகுமார்: குடியுரிமை சட்டப்படி இந்தியாவில் வசிக்கும் வெளிநாட்டவருக்கு 11 ஆண்டுகள் குடியிருந்தால் அவர் களுக்கு குடியுரிமை வழங்கப்படும். குடியுரிமை யாருக்கும் பறிக்கப்பட மாட்டாது.

ஜெ.அன்பழகன்: இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வாங்கித் தருவோம் என்கிறீர்கள். நீங்கள் எதிராக வாக்களித்திருந்தால் இப்போது எந்த பிரச் சினையும் வந்திருக்காது. இதற்காகதான் போராட்டம்.

ஆர்.பி.உதயகுமார்: சிறு பான்மையினர் ஒருவருக்குக்கூட குடியுரிமை பாதிக்கப்படாது என்று நாங்கள் மட்டுமல்ல. உள் துறை அமைச்சர், பிரதமர்கூட உறுதியளித்துள்ளனர். இரட்டை குடியுரிமை குறித்தும் எடுத்துரைக் கப்பட்டுள்ளது. 2003-க்கு முன் தேசிய குடியுரிமை பதிவேடு என்பது கிடையாதே. பிள்ளையார் சுழி போட்டது நீங்கள். பழியை மட்டும் அப்பாவியான அதிமுக அரசு மீது சுமத்துகிறீர்கள்.

தேசிய குடிமக்கள் பதிவேடு தான் பிரச்சினை என்கிறார்கள். அசாம் மாநிலத்தைத் தவிர இதை வேறு மாநிலத்தில் நடைமுறைப்படுத்த எந்த உத்தரவும் வரவில்லை. அப்படியே வந்தாலும், அதை அமல்படுத்தும்போது தமிழகத்தில் சிறுபான்மையினர் பாதிக்கப்பட்டால் முதல் எதிர்ப்பு குரலை அதிமுக எழுப்பும். அவர்களின் உரிமையைப் பாதுகாக்கும்.

இவ்வாறு விவாதம் நடை பெற்றது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in