Published : 07 Jan 2020 09:21 PM
Last Updated : 07 Jan 2020 09:21 PM

நெல்லை கண்ணன் கைது ஏன்? சிஏஏ எதிர்ப்புக் கோலம் போட்டதால் கைதா?- முதல்வர் பழனிசாமி பதில் 

குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிரான கோலம் போட்டதால்தான் கைது செய்யப்பட்டார்களா என்பது குறித்தும், நெல்லை கண்ணன் கைது குறித்தும் முதல்வர் பழனிசாமி இன்று பேரவையில் பதில் அளித்தார்.

சட்டப்பேரவையின் இந்த ஆண்டு கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் நேற்று தொடங்கியது. இந்நிலையில், இன்று (ஜன.7) காலை 10 மணிக்கு சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர்கள் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதையடுத்து, ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் முன்மொழியப்பட்டது. பிற்பகலுக்குப் பிறகு, ஆளுநர் உரை மீதான விவாதம் தொடங்கப்பட்டது. அப்போது குடியுரிமைத் திருத்தச் சட்ட விவகாரத்தை திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எழுப்பின. காங்கிரஸ் எம்எல்ஏ பிரின்ஸ், குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிரான கோலம் போட்டதால்தான் கைது செய்யப்பட்டார்களா என்று கேள்வி எழுப்பினார்.

அதற்கு முதல்வர் பழனிசாமி பதில் அளித்துப் பேசியதாவது:

கோலம் எதிர்ப்பு

''கோலம் போட்டதைக் குறித்துப் பேசினார்கள். கோலம் அவர்கள் வீட்டின் முன்பு போட்டிருந்தால் பிரச்சினை இருக்காது. வேறு ஒருவர் வீட்டின் முன்பு போடுகின்ற போதுதான் பிரச்சினை தொடங்குகிறது. அந்த வீட்டின் உரிமையாளர் புகார் செய்கிறார். புகார் செய்தால் அரசாங்கம் என்ன செய்யும். வேறு வழி கிடையாது. அவரவர்கள் வீட்டின் முன்பு கோலம் போட்டால் பிரச்சினை கிடையாது. வேறு ஒருவர் வீட்டின் முன்பு போட்டது தான் பிரச்சினை. அதனால் தான் நடவடிக்கை.

நெல்லை கண்ணன் கைது
ஒரு மூத்த உறுப்பினர், ஒரு வழக்கறிஞர். ஒரு பொதுக்கூட்டத்திலே என்ன பேசுவதென்று அந்தப் பேச்சாளருக்கு தெரிய வேண்டும். யாராக இருந்தாலும் சரி, எந்தக் கட்சித் தலைவராக இருந்தாலும் சரி, அது மாதிரி பேசக் கூடாது.

"போய் சோலியை முடிச்சரணும்" என்றால் என்ன அர்த்தம். இதை எப்படி நீங்கள் ஏற்றுக் கொள்வீர்களா? சொல்லுங்கள் நீங்கள் ஏற்றுக் கொள்வீர்களா? யாராக இருந்தாலும் சரி. அது எந்தக் கட்சித் தலைவராக இருந்தாலும் சரி. சட்டம் தன் கடமையைச் செய்யும். அது யாராக இருந்தாலும் சரி. அப்படி போய் பொதுக்கூட்டத்தில் பேசினால் இதை யார் ஏற்றுக் கொள்வார்கள்.

பாரதப் பிரதமரையோ, மத்திய உள்துறை அமைச்சரையோ, யாரைப் பற்றி இருந்தாலும் சரி. பேச்சு சுதந்திரம் உண்டு, அதற்கு ஒரு எல்லை உண்டு, ஒரு வரம்பு உண்டு. அந்த வரம்பை மீறிப் பேசுகின்ற போதுதான், இந்தப் பிரச்சினை உருவாகிறது. ஆகவே அதையொட்டிதான் காவல்துறை தன் கடமையைச் செய்திருக்கிறதே தவிர, யார் மீதும் வீண்பழி சுமத்தி தவறான வழக்கைத் தொடரவில்லை''.

இவ்வாறு முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x