

சின்னமனூரில் அதிமுகவினரால் கடத்திச் சென்றதாகக் கூறப்பட்ட ஒன்றிய திமுக பெண் உறுப்பினர் ஜெயந்தியின் ஆடியோ இன்று சமூகவலைதளங்களில் பரவியது. அதில் யாரும் தன்னைக் கடத்தவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.
சின்னமனூர் ஒன்றியத்தில் உள்ள 10 வார்டுகளில் 6 வார்டுகளில் திமுகவும், மீதம் உள்ள 4 இடங்களில் அதிமுகவும் வெற்றி பெற்றுள்ளது.
தலைவர் பதவிக்கு பெரும்பான்மையை நிரூபிக்கும் வகையில் எதிரெதிர் அணியினரை தங்கள் பக்கம் இழுப்பதற்கான முயற்சி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் நேற்று முதல் வார்டு (பொட்டிப்புரம்) திமுக உறுப்பினர் ஜெயந்தி பதவியேற்று வெளியேறும் போது திமுகவினர் அவரைத் தங்கள் வாகனத்தில் வலுக்கட்டாயமாக ஏற்றிச் செல்ல முயன்றனர்.
இதற்கு ஜெயந்தி எதிர்ப்பு தெரிவித்ததால் அப்பகுதியில் சலசலப்பு ஏற்பட்டது. போலீஸார் தலையிட்டு அவரை பாதுகாப்புடன் வீட்டிற்கு அழைத்துச் சென்றனர்.
இதனைத் தொடர்ந்து ஜெயந்தியை அதிமுகவினர் கடத்திச் சென்றதாக திமுகவினர் சின்னமனூர் காவல்நிலையத்தில் புகார் செய்தனர்.
இந்நிலையில் ஜெயந்தி போடி காவல்நிலைய ஆய்வாளர்க்கு புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில், "நான் பதவியேற்று முடிந்ததும் நீ எங்களுடன்தான் வர வேண்டும் என்று திமுகவினர் தகாத வார்த்தையால் பேசினர். மேலும் என்னையும், என் கணவரையும் அடித்து மிரட்டினர். இதனால் எனது மனநிலை பாதிக்கப்பட்டு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது.
திண்டுக்கல்லில் உள்ள மருத்துவமனையில் இருவரும் சிகிச்சை பெற்று வருகிறோம். எனவே எனது குடும்பத்திற்கு போலீஸார் பாதுகாப்பு அளிப்பதோடு, திமுகவினரின் அச்சுறுத்தலில் இருந்தும் என் குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டும்” என்று ஜெயந்தி பேசியுள்ளார்.
இந்நிலையில் இவர் பேசியதாக ஆடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அதில், என்னை அதிமுகவினர் யாரும் கடத்தவும் இல்லை, மிரட்டவும் இல்லை. திண்டுக்கல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று என் உறவினர் வீட்டில் பாதுகாப்பாக இருக்கிறோம் என்று ஜெயந்தியின் குரல் பதிவாகியிருக்கிறது.