

முதல்வர் ஜெயலலிதாவை அவதூறாக பேசியதாகக் கூறி காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு எதிராக அதிமுகவினரும், அதிமுகவிற்கு எதிராக காங்கிரஸ் கட்சியினரும் கடந்த 3 நாட்களாக பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் நேற்று காலை 8 மணியளவில் நந்தம்பாக்கம் வர்த்தக மையம் எதிரே ஒரு கட்டிடத்தின் மேலே வைக்கப்பட்டுள்ள 100 அடி உயரம் கொண்ட செல்போன் டவரில் அதிமுக வழக்கறிஞர் பிரிவை சேர்ந்த வழக்கறிஞர் ராஜீவ்காந்தி யும், அருகே இருந்த மற்றொரு செல்போன் கோபுரத்தில் ராஜீவ் காந்தியின் சித்தி மகனும் அதிமுக தொண்டருமான வில்வதுரையும் ஏறினர்.
இருவரையும் மீட்பதற்காக போலீஸாரும், தீயணைப்பு படையினரும் விரைந்து சென்று செல்போன் டவரில் ஏறினர். அப்போது 2 பேரும் நீங்கள் மேலே வந்தால் கீழே குதித்து விடுவோம் என்ற மிரட்டினர். இதனால் மீட்பு குழுவினர் பின் வாங்கினர். இந்நிலையில் வழக்கறிஞர் ராஜீவ்காந்தி செல்போன் கோபுரத்திலேயே மயங்கி விழுந்தார். அதைத் தொடர்ந்து அவரை மீட்பதற்காக தீயணைப்பு படையினரும், போலீஸாரும் மேலே ஏறிச்சென்று, கயிறு கட்டி கீழே இறக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் இதேப்போல கயிறு கட்டி இறக்கி கொண்டு வரப்பட்ட சசிபெருமாள் திடீரென இறந்ததால், கயிறு கட்டி இறக்கும் முயற்சியை போலீஸார் கைவிட்டனர். தரையில் நின்று இதை பார்த்துக் கொண்டிருந்த ராஜீவ்காந்தியின் தாய் அமராவதியும் திடீரென மயங்கி விழுந்தார்.
இன்னொரு செல்போன் கோபுரத்தில் ஏறி நின்று போராட்டத்தில் ஈடுபட்ட வில்வதுரையிடம் ஆலந்தூர் எம்.எல்.ஏ. வெங்கட்ராமன் செல்போன் மூலம் பேசினர். நீண்ட நேர பேச்சுவார்த்தைக்கு பின்னர் காலை 10.45 மணியளவில் வில்வதுரை தானாகவே கீழே இறங்கி வந்தார்.
ராஜீவ்காந்தியை மீட்க, காலை 11.15 மணி அளவில் தேனாம்பேட்டை தீயணைப்பு நிலையத்தில் இருந்து ராட்சத கிரேன் வரவழைக்கப்பட்டது. அதில் மேலே சென்ற தீயணைப்பு வீரர்கள் செல்போன் கோபுரத்தில் மயங்கி கிடந்த ராஜீவ்காந்தியை மீட்டு பத்திரமாக கீழே கொண்டு வந்தனர். அங்கு தயாராக நின்ற 108 ஆம்புலன்சில் முதல் உதவி சிகிச்சை அளித்து ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த சம்பவத்தால் நேற்று காலை நந்தம்பாக்கம் பகுதி பரபரப்பாக காணப்பட்டது.