

உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீதான டெண்டர் முறைகேடு புகார் தொடர்பாக நடத்தப்பட்ட ஆரம்பகட்ட விசாரணை அறிக்கையைத் தாக்கல் செய்ய லஞ்ச ஒழிப்புத் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை, கோவை மாநகராட்சிகளின் உள்கட்டமைப்புப் பணிகளுக்கான டெண்டர்களை தனக்கு வேண்டியவர்களுக்கு வழங்கியதன் மூலம் அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியதாக அமைச்சர் எஸ்.பி. வேலுமணிக்கு எதிரான புகார் தொடர்பாக நீதிமன்றக் கண்காணிப்பில் சிறப்புப் புலனாய்வுக் குழு அமைத்து விசாரிக்க உத்தரவிடக் கோரி அறப்போர் இயக்கம், திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், இது தொடர்பாக, லஞ்ச ஒழிப்புத் துறை எஸ்.பி பொன்னி விசாரணை நடத்தவும், இந்த விசாரணையைக் கண்காணித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டுமென லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குனருக்கு உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கு நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், ஹேமலதா அடங்கிய அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. திமுக தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, தங்களது புகாரில் ஆரம்பக்கட்ட முகாந்திரம் இருப்பதால், வழக்குப்பதிவு செய்ய வேண்டும் எனவும், தகவலில் சந்தேகம் இருந்தால் மட்டுமே ஆரம்பக்கட்ட விசாரணை நடத்த முடியும் என்றும் வாதிட்டார்.
லஞ்ச ஒழிப்புத் துறை மீது நம்பிக்கை இல்லாததால், இந்த வழக்கை சிறப்பு விசாரணைக் குழு விசாரிக்க உத்தரவிட வேண்டும் எனவும், அதை நீதிமன்றம் கண்காணிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
அறப்போர் இயக்கத்தின் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சுரேஷ், தமிழக அமைச்சருக்கு எதிராக மாநில அரசுத் துறை நடத்தும் விசாரணை நியாயமாக இருக்காது எனவும், லஞ்ச ஒழிப்புத்துறை சட்டத்தின் விதிகளின்படி மூன்று மாதத்திற்குள் ஆரம்பக்கட்ட விசாரணையை முடிக்க வேண்டும் எனும் நிலையில், அமைச்சர் வேலுமணிக்கு எதிராக ஆரம்பக்கட்ட விசாரணையை லஞ்ச ஒழிப்புத் துறை தொடங்கி (கடந்த ஆண்டு ஜனவரி 29-ம் தேதி) ஓராண்டாகியும் விசாரணையை இன்னும் முடிக்கவில்லை எனத் தெரிவித்தார்.
லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பில் ஆஜரான தமிழக அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஏ. நடராஜன், மனுதாரர்கள் புகார் மீது ஆரம்பக்கட்ட விசாரணை முடிக்கப்பட்டு, அது தொடர்பான அறிக்கை லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனரிடம் அளித்திருப்பதாகவும், மேற்கொண்டு அவர் தான் அதன் மீது முடிவெடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
இதையடுத்து, அமைச்சர் வேலுமணிக்கு எதிரான புகார் தொடர்பாக லஞ்ச ஒழிப்புத் துறை நடத்திய ஆரம்பக்கட்ட விசாரணை அறிக்கையை சீல் வைத்த கவரில் தாக்கல் செய்ய லஞ்ச ஒழிப்பு துறைக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை ஜனவரி 23-ம் தேதிக்குத் தள்ளி வைத்தனர்.