

அவனியாபுரத்தில், ஜல்லிக்கட்டு விழாக் குழுவை ஊர் பொது மக்களே சேர்ந்து தேர்வு செய்ய உத்தரவிடக் கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.
அவனியாபுரத்தைச் சேர்ந்த ராமசாமி தரப்பில் அவரது வழக்கறிஞர் நீதிபதிகள் துரைசுவாமி, ரவீந்திரன் அமர்வு முன்பாக இந்த முறையீட்டை முன்வைத்தார்.
அந்த முறையீட்டில், "ஒவ்வோர் ஆண்டும் தை 1-ல் அவனியாபுரத்திலும், 2-ல் பாலமேட்டிலும், 3-ல் அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு நடத்தப்படும்.
அவனியாபுரம் ஜல்லிகட்டு நடத்த, விழாக்குழு அமைக்கப்படும். ஆனால் ஒவ்வொரு ஆண்டும் தொடர்ச்சியாக ஒருவரே தலைவர் பொறுப்பினை வகித்து வருகிறார். செயலர், பொருளாளர் போன்ற பொறுப்புகளை மட்டும் தேர்வு செய்யலாம் என மாவட்ட ஆட்சியர் தரப்பில் உத்தரவிடப்பட்டுள்ளது.
இது ஏற்கத்தக்கதல்ல. ஆகவே, அவனியாபுரம் ஊர் பொதுமக்களே இணைந்து, ஜல்லிக்கட்டு விழாக் குழுவை அமைக்க உத்தரவிட வேண்டும்" எனக் குறிப்பிடப்பட்டது.
இந்த முறையீட்டை மனுவாக தாக்கல் செய்தால் விசாரணைக்கு எடுப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.