ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயில் கருவறை படம் வெளியானதைக் கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயில் கருவறை படம் வெளியானதைக் கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
Updated on
1 min read

ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயில் கருவறையை படம் பிடித்து விற்பனை செய்த ஆலயப் பணியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ராமாயண தொடர்புகொண்ட ஸ்தலமாக அழைக்கப்படும் ராமேசுவரம் ராம பிரான் (வைணவம்) ஈஸ்வரனை சிவலிங்க வடிவில் (சைவத்தை) பிரதிஷ்டை செய்தார் என்பதால் சைவ, வைணவ மதத்தினர் இருவரும் வந்து கூடி வழிபடும் இடமாகவும் இருப்பதால் இந்தியாவில் உள்ள இந்துக் கோயில்களில் ராமேசுவரம் மிக முக்கிய சிறப்பை பெற்றுள்ளது.

ராமனால் பிரதிஷ்டை செய்யப்பட்ட இங்குள்ள சிவலிங்கத்துக்கு சிருங்கேரி சங்கராச்சாரியரிடம் தீட்ஷை பெற்ற குருக்கள் மட்டுமே பூஜை செய்ய முடியும். இவர்களைத் தவிர சிவலிங்கம் அமைந்துள்ள கருவறைக்குள் செல்ல சிருங்கேரி சங்கராச்சாரியர் மற்றும் நேபாள மன்னருக்கு மட்டுமே அனுமதி உண்டு. மேலும், கருவறையில் வீற்றிருக்கும் மூலவரான சிவலிங்கத்தைப் படம் எடுக்கக் கூடாது என விதிகள் உள்ளன.

இந்நிலையில் கடந்த மூன்று நாட்களாக மூலவரான சிவலிங்கத்தின் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்தப் படத்தை வடமாநிலத்தைச் சேர்ந்த பக்தர் ஒருவருக்காக ஆலயத்தின் கருவறையில் பணியாற்றும் குருக்கள் ஒருவர் தனது செல்போன் மூலம் படம் எடுத்து கொடுத்து அதற்காக அந்தப் பக்தரிடமிருந்து பெரும் தொகையை கொண்டதாகவும் கூறப்படுகிறது.

ஆகம விதிகளை மீறி ராமநாதசுவாமி கருவறையில் உள்ள மூலவரை படம் பிடித்த ஆலய குருக்கள் மீதும் இதற்கு துணையாக இருந்தவர்கள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயில் தேவஸ்தான அலுவலக வளாகத்தில் செவ்வாய்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தாலுகா செயலாளர் சே.முருகானந்தம் தலைமை தாங்கினார். மாவட்ட நிர்வாக கவுன்சில் உறுப்பினர் சி.ஆர்.செந்தில்வேல், மாவட்ட குழு உறுப்பினர் வடகொரியா உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். இதில் திரளான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

எஸ். முஹம்மது ராஃபி

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in