

ஆளுநர் உரையை கிழித்தெறிந்ததால், திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன், நடப்பு கூட்டத்தொடரில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
சட்டப்பேரவையின் இந்த ஆண்டு கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் நேற்று தொடங்கியது. இந்நிலையில், இன்று (ஜன.7) காலை 10 மணிக்கு சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர்கள் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து, ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் முன்மொழியப்பட்டது. பிறகு ஆளுநர் உரை மீதான விவாதம் தொடங்கப்பட்டது.
அப்போது, திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன், தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சரியில்லை எனவும், உள்ளாட்சித் தேர்தல் முறையாக நடைபெறவில்லை எனவும் குற்றம்சாட்டினார். அப்போது, ஜெ.அன்பழகன், ஆளுநர் உரையை கிழித்தெறிந்து சபாநாயகரின் இருக்கையில் போட்டார். உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி குறுக்கிட முயன்றபோது, ஜெ.அன்பழகன் அமைச்சரை ஒருமையில் பேசியதாக குற்றம்சாட்டப்பட்டது.
இதையடுத்து, அவை நடவடிக்கைக்கு குந்தகம் விளைவித்ததாக கூறி, அன்பழகனுக்கு எதிராக தீர்மானம் முன்மொழியப்பட்டது. அதன்படி, சட்டப்பேரவை கூட்டத்தொடர் முழுவதும் ஜெ.அன்பழகன் பங்கேற்க தடை விதிக்கப்பட்டது.
சட்டப்பேரவை வளாகத்தில் இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அன்பழகன், "மறைந்த ஜெயலலிதா எதிர்கட்சி தலைவராக இருந்த போது, பட்ஜெட்டை கிழித்து அப்போதைய முதல்வர் கருணாநிதி முன்பு போட்டார். அது எனக்கு ஞாபகம் வந்ததால், ஆளுநர் உரையை கிழித்துப் போட்டேன். என்னை அவையில் பேச விடவில்லை. ஒரு மணிநேரத்தில் 5 நிமிடம் தான் பேசினேன். 55 நிமிடங்கள் ஆளுங்கட்சி அமைச்சர்கள் தான் பேசினர். நான் இனி பேசக்கூடாது என சபாநாயகர் கூறினார். இது ஆளுநர் உரை அல்ல, கிழிக்க வேண்டிய உரை எனக்கூறி கிழித்துப் போட்டேன்" என ஜெ.அன்பழகன் தெரிவித்தார்.