கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலயத்தில் மார்ச் 7, 8-ல் திருவிழா: யாழ்ப்பாண மாவட்ட ஆட்சியர் தகவல்

கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலயம். வலது: யாழ்ப்பபாணம் மாவட்ட ஆட்சியர்  என்.வேதநாயகன்.
கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலயம். வலது: யாழ்ப்பபாணம் மாவட்ட ஆட்சியர் என்.வேதநாயகன்.
Updated on
1 min read

கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலயத்தில் மார்ச் 07,08 ஆகிய இரு நாட்கள் திருவிழா நடைபெறும் என யாழ்ப்பாண மாவட்ட ஆட்சியர் என். வேதநாயகன் அறிவித்துள்ளார்.

கச்சத்தீவு, ராமேசுவரத்திலிருந்து 12 கடல் மைல் தொலைவிலும், இலங்கை நெடுந்தீவில் இருந்து 8 கடல் மைல் தொலைவிலும் ‘பாக்ஜலசந்தி’ கடற்பரப்பில் அமைந்துள்ளது. ராமேசுவரத்திலிருந்து சுமார் இரண்டரை மணி நேரத்திலும், இலங்கையின் நெடுந்தீவு மற்றும் தலைமன்னாரில் இருந்து சுமார் ஒன்றரை மணி நேரத்திலும் கச்சத்தீவை அடையலாம்.

கடலில் இயற்கைச் சீற்றம், புயல் மற்றும் பேராபத்து காலங்களில் காப்பாற்றவும், பெருமளவு மீன் கிடைக்கவும் மீனவர்கள் வழிபாடு நடத்திய பின்னரே கடலுக்குள் செல்வது வழக்கம்.

ராமேசுவரம் ஓலைக்குடாவைச் சார்ந்த அந்தோணிப்பிள்ளை பட்டங்கட்டி மற்றும் தொண்டியை சார்ந்த சீனிக்குப்பன் பட்டங்கட்டி ஆகியோரால் கடந்த 1913ம் ஆண்டு கச்சத்தீவில் சிறிய ஓலைக் குடிசையில் புனித அந்தோணியார் தேவாலயம் நிறுவப்பட்டது.

கச்சத்தீவு ஒப்பந்தம்

ராமநாதபுரம் சேதுபதி மன்னர்களுக்குச் சொந்தமான கச்சத்தீவை மண்டபம் மரைக்காயர்கள் குத்தகைக்கு எடுத்து முத்துக்கள் மற்றும் மீன்பிடிக்காக பயன்படுத்தி வந்தனர். 08.07.1974 அன்று இந்தியப் பிரதமர் இந்திராகாந்தி மற்றும் இலங்கை பிரதமர் சிறீமாவோ பண்டாரநாயக்காவுக்கு தமிழகத்திற்குச் சொந்தமான கச்சத்தீவை எழுதிக் கொடுத்தார்.

இந்த கச்சத்தீவு ஒப்பந்தப்படி அங்குள்ள புனித அந்தோணியார் தேவாலயத் திருவிழாவில் இந்தியர்கள் பங்கேற்கான உரிமைகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும் இலங்கை அரசு சார்பாக கச்சத்தீவில் புதிய தேவாலயம் கடந்த 23.12.2016 அன்று திறக்கப்பட்டது.

இந்நிலையில் யாழ்ப்பபாணம் மாவட்ட ஆட்சியர் அரங்கத்தில் மாவட்ட ஆட்சியர் என். வேதநாயகன் தலைமையில் கச்சத்தீவு உள்ள புனித அந்தோணியார் திருவிழா ஏற்பாடுகள் தொடர்பான கலந்துரையாடல் நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களிடம் யாழ்ப்பாணம் மாவட்ட ஆட்சியர் என். வேதநாயகன் கூறியதாவது,

கச்சத்தீவில் உள்ள புனித அந்தோணியார் ஆலயத் திருவிழா மார்ச் மாதம் 07 மற்றும் 08 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. இந்த திருவிழாவில் இலங்கையிலிருந்து 6 ஆயிரம் பேர்களும், இந்தியாவிலிருந்து 3 ஆயிரம் பேர்கள் என சுமார் 9 ஆயிரம் பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

கச்சத்தீவில் திருவிழாவின் போது குடிதண்ணீர், மருத்துவம், கழிவறைகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரும் பொறுப்பினை இலங்கை கடற்படையினர் ஏற்றுக் கொள்வார்கள். பக்தர்கள் அனைவரும் உயிர் காக்கும் லைஃப் ஜாக்கெட் கட்டாயம் அணிந்து கொள்ள வேண்டும். பாலீதின் பொருட்களை தவிர்த்துக் கொள்ள வேண்டும், என்றார்.

மேலும் இந்தக் கூட்டத்தில் யாழ்ப்பாண மறை மாவட்ட ஆயர் ஜஸ்டின் ஞானபிரகாசம் மூலமாக இந்தியாவிலிருந்து பக்தர்கள் கச்சத்தீவு திருவிழா கலந்து கொள்வதற்கான அழைப்பிதழ் சிவகங்கை மறைமாவட்ட ஆயருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எஸ். முஹம்மது ராஃபி

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in