

பிரபல பேச்சாளர் நெல்லை கண்ணன் ஜாமீன் மனு மீதான விசாரணை வரும் வியாழக்கிழமைக்கு (ஜன 9) ஒத்திவைக்கப்பட்டது.
மேலப்பாளையத்தில் குடியுரிமை சட்டத்துக்கு எதிராக நடத்தப்பட்ட பொதுக்கூட்டத்தில் பேசியபோது பிரதமர், உள்துறை அமைச்சர் ஆகியோர் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்ததாக பிரபல பேச்சாளர் நெல்லை கண்ணன் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில் அவரது ஜாமீன் மனு மீதான விசாரணையை திருநெல்வேலி முதன்மை அமர்வு நீதிமன்றம் நாளை மறுநாளுக்கு (ஜன.9) ஒத்திவைத்துள்ளது.
முன்னதாக, மேலப்பாளையத்தில் எஸ்டிபிஐ கட்சி சார்பில் குடியுரிமை சட்டத்துக்கு எதிராக கடந்த 29-ம் தேதி பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது. அதில் சிறப்பு பேச்சாளராக பங்கேற்ற நெல்லை கண்ணன், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்ததாக அவர் மீது 5 பிரிவுகளின் கீழ் மேலப்பாளையம் போலீஸார் வழக்குபதிவு செய்தனர்.
கடந்த 1-ம் தேதி நெல்லை கண்ணன் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை வரும் 13-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டதை அடுத்து சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இதனிடையே ஜாமீன் கேட்டு நெல்லை கண்ணன் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனு திருநெல்வேலி 2-வது நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டிருந்தது.
இதையடுத்து மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மீண்டும் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வழக்கறிஞர் பிரம்மா தாக்கல் செய்துள்ள இந்த மனு திருநெல்வேலி முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி நஷீர் அகமது முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது வழக்கு விசாரணைக்கு அரசுத் தரப்பில் கால அவகாசம் கோரியதை அடுத்து விசாரணையை நாளைக்கு (9-ம் தேதி) நீதிபதி ஒத்திவைத்தார்.