

மாநில தேர்தல் ஆணையர் நியமனம் செல்லாது என்ற கிரண்பேடி ஆணை சட்டவிரோதம்; அதை பின்பற்ற வேண்டாம் என்ற புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியின் உத்தரவை புறக்கணித்து தேர்தல் ஆணையரை நியமிக்க உள்ளாட்சி துறை இன்று விளம்பரம் வெளியிட்டுள்ளது.
புதுச்சேரியில் இதுவரை இரு முறை மட்டுமே உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றுள்ளது. கடந்த 2006-ல் கடைசியாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. அதையடுத்து கடந்த 2011 முதல் தற்போது வரை உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாமல் உள்ளது. உச்ச நீதிமன்ற உத்தரவுபடி பணிகளை மீண்டும் அரசு தொடங்கியது.
இந்நிலையில், கடந்த ஆண்டு ஜூலையில் உள்ளாட்சி துறை மூலமாக துறை அமைச்சர் நமச்சிவாயம், முதல்வர் நாராயணசாமி மற்றும் அமைச்சரவைக்கு தெரியாமல் உள்ளாட்சித் தேர்தல் ஆணையரை நியமிக்க விளம்பரம் வெளியானது. இதற்கு காரணமாக இருந்தோர் மீது நடவடிக்கை எடுப்பதாக பேரவையில் தெரிவிக்கப்பட்டு ஏதும் செய்யப்படவில்லை. ஆளுநர் கிரண்பேடி பின்புலமே இதற்கு காரணம் என்று சட்டப்பேரவையில் குற்றச்சாட்டு எழுப்பப்பட்டது.
அதைத்தொடர்ந்து அந்த விளம்பரத்தை ரத்து செய்து சட்டப்பேரவையை கூட்டி புதுச்சேரியில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தும் ஆணையராக பாலகிருஷ்ணனை முதல்வர் நாராயணசாமி அறிவித்தார்.
கடந்த டிசம்பர் 20-ம் தேதி மாநில தேர்தல் ஆணையராக பாலகிருஷ்ணனை நியமித்தது செல்லாது என்று ஆளுநர் கிரண்பேடி ஒரு ஆணையை வெளியிட்டார். "மாநில தேர்தல் ஆணையரை நீக்குவதாக உள்துறை ஏதும் அறிவிக்கவில்லை. நியமனம் செல்லாது என்ற கிரண்பேடியின் ஆணை சட்டவிரோதம். அதனை பின்பற்றாதீர்கள்" என்று தலைமை செயலருக்கும், உள்ளாட்சி துறைக்கும் முதல்வர் நாராயணசாமி உத்தரவிட்டார்.
இந்நிலையில், முதல்வர் உத்தரவை மீறி மாநில தேர்தல் ஆணையரை நியமிக்க விண்ணப்பங்களை வரவேற்று இன்று (ஜன.7) உள்ளாட்சி துறை விளம்பரம் வெளியிட்டுள்ளது.
ஏற்கெனவே நியமிக்கப்பட்ட தேர்தல் ஆணையர் நியமிக்கப்பட்ட பணிகளை செய்து வரும் சூழலில், புதிதாக ஆணையரை நியமிக்க துறை தரப்பிலிருந்து விளம்பரம் வெளியாகியுள்ளதால் அரசு வட்டாரங்களில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. அரசை இயக்குவது ஆளுநரா, முதல்வரா என்ற கேள்வியும் மக்களிடத்தில் எழுந்துள்ளது. குறிப்பாக அதிகாரிகள் யார் முடிவுகளை செயல்படுத்துகிறார்கள் என்பது வெளிப்படையாகியுள்ளது எனவும் அரசியல் வட்டாரங்களில் பேசத்தொடங்கியுள்ளனர்.