Published : 07 Jan 2020 12:31 PM
Last Updated : 07 Jan 2020 12:31 PM

வருமானத்தை மறைத்ததாக தொடரப்பட்ட வழக்கிலிருந்து விடுவிக்க வேண்டும்: கார்த்தி சிதம்பரம் கோரிக்கையை நிராகரித்தது சிறப்பு நீதிமன்றம்

வருமானத்தை மறைத்ததாக தொடரப்பட்ட வழக்கில் இருந்து தங்களை விடுவிக்கக் கோரி கார்த்தி சிதம்பரம் மற்றும் அவரது மனைவி ஸ்ரீநிதி தாக்கல் செய்த மனுக்களை, சென்னை எம்.பி., எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் மற்றும் மருமகள் ஸ்ரீநிதி ஆகியோர் முட்டுக்காட்டில் உள்ள தங்களுக்கு சொந்தமான சொத்துகளை கடந்த 2015ம் ஆண்டு அக்னி எஸ்டேட்ஸ் பவுன்டேசன் என்ற நிறுவனத்துக்கு ஒரு ஏக்கர் 4.25 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளனர்.

சந்தை மதிப்பின்படி ஒரு ஏக்கர் 3 கோடி ரூபாய் என்று குறிப்பிட்டு விற்பனை ஒப்பந்தம் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த தொகைக்கு மட்டும் வருமான வரித்துறைக்கு கணக்கு காட்டப்பட்டுள்ளது.

கார்த்தி சிதம்பரம் பெற்ற ரொக்கப்பணம் 6.38 கோடி ரூபாயையும், அவரது மனைவி ஸ்ரீநிதி பெற்ற ரொக்கப்பணம் 1.35 கோடி ரூபாயையும் வருமான வரி கணக்கில் காட்டப்படவில்லை என, அவர்கள் இருவர் மீதும் வருமான வரித்துறை வழக்கு தொடர்ந்தது.

சென்னை ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள எம்.பி., எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள இந்த வழக்கில் இருந்து தங்களை விடுவிக்கக்கோரி கார்த்தி சிதம்பரம், ஸ்ரீநிதி ஆகியோர் மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனுவை விசாரித்த சிறப்பு நீதிமன்ற நீதிபதி லிங்கேஸ்வரன், மனு மீதான தீர்ப்பை ஒத்தி வைத்திருந்தார். இந்நிலையில் இந்த வழக்கு சிறப்பு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. வருமான வரித்துறை தரப்பில் தங்கள் வழக்கு தொடர ஆதாரமாக இருந்த ஆவணங்கள் முன்வைக்கப்பட்டு, இருவரின் கோரிக்கையை நிராகரிக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த சிறப்பு நீதிமன்ற நீதிபதி லிங்கேஸ்வரன், இருவரின் மனுக்களையும் தள்ளுபடி செய்வதாக உத்தரவிட்டுள்ளார். மேலும் இருவர் மீதான குற்றச்சாட்டு பதிவு நடைமுறையை தொடங்க வருமான வரித்துறைக்கு உத்தரவிட்டு வழக்கை ஜனவரி 21க்கு ஒத்திவைத்தார். மேலும் அன்றையதினம் இருவரும் ஆஜராகாவிட்டால் வாரண்ட் பிறப்பிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x