Published : 07 Jan 2020 11:38 AM
Last Updated : 07 Jan 2020 11:38 AM

குடியுரிமைச் சட்டத்துக்கு எதிர்ப்பு: சட்டப்பேரவையில் இருந்து திமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு

குடியுரிமைச் சட்டம் குறித்து விவாதிக்க சட்டப்பேரவையில் அனுமதி அளிக்காததையடுத்து, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அக்கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினர்கள் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.

சட்டப்பேரவையின் இந்த ஆண்டு கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் நேற்று தொடங்கியது. இந்நிலையில், இன்று (ஜன.7) காலை 10 மணிக்கு சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர்கள் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து, ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் முன்மொழியப்பட்டு, விவாதம் தொடங்கப்பட்டது.

அப்போது, எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை எதிர்த்து சட்டப்பேரவையில் தீர்மானம் இயற்றுமாறும் விவாதிக்குமாறும் வலியுறுத்தினார். அதற்கு, சபாநாயகர் அனுமதி அளிக்காததையடுத்து, ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் வெளிநடப்பு செய்தனர்.

இதையடுத்து, சட்டப்பேரவை வளாகத்தில் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களிடம் பேசியதாவது:

"குடியுரிமைத் திருத்தச் சட்டத்தால் இந்தியா முழுவதும் தீப்பற்றி கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருக்கிறது. அதனால், குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை முக்கியப் பிரச்சினையாகக் கருதி சட்டப்பேரவையில் எழுப்பினோம். அதற்கு சபாநாயகர் அனுமதி தரவில்லை.

கேரளா, புதுவை, மேற்கு வங்கம், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், பஞ்சாப், டெல்லி, ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களின் முதல்வர்கள், குடியுரிமைத் திருத்தச் சட்டத்தைக் கடுமையாக எதிர்த்துக் கொண்டிருக்கின்றனர். பாஜக ஆளும் அசாம் மாநிலத்தின் முதல்வரே இந்தச் சட்டத் திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன், ஒடிசாவின் முதல்வர் நவீன் பட்நாயக், பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் ஆகியோரின் கட்சியினர், நாடாளுமன்றத்தில் இச்சட்டத் திருத்தத்தை ஆதரித்து வாக்களித்திருந்தாலும், தங்கள் மாநிலத்தில் அதனை அமல்படுத்த மாட்டோம் என கூறியிருக்கின்றனர்.

ஆனால், அதிமுக, இச்சட்டத் திருத்தத்தை ஆதரித்து நாடாளுமன்றத்தில் வாக்களித்தது. அதனால், சட்டப்பேரவையிலாவது இதனை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றுவர் என எதிர்பார்த்தோம். ஆனால், பாஜகவுக்கு அடிமையாக, சேவகம் செய்யக்கூடிய ஆட்சியாக இந்த ஆட்சி இருக்கிறது. இதனைக் கண்டித்து வெளிநடப்பு செய்திருக்கிறோம்" என ஸ்டாலின் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x