Last Updated : 07 Jan, 2020 11:48 AM

 

Published : 07 Jan 2020 11:48 AM
Last Updated : 07 Jan 2020 11:48 AM

மதங்களைக் கடந்து மலர்ந்த மனிதநேயம்: விபத்தில் சிக்கி நடுவழியில் தவித்த ஐயப்ப பக்தர்களுக்கு உணவு, தங்கும் வசதி செய்த முஸ்லிம்கள்

கேரளாவில் இருந்து வந்த ஐயப்ப பக்தர்களின் வேன் தென்காசி மாவட்டம் பண்பொழி அருகே விபத்துக்குள்ளாகி நடுவழியில் நின்றுவிட தவித்துக்கொண்டிருந்த பக்தர்களுக்கு உணவு, இரவு தங்கும் வசதி செய்து கொடுத்து மனிதத்தை நிலைநாட்டியுள்ளனர் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக நிர்வாகிகள்.

கேரள மாநிலம் கொல்லத்தைச் சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் நேற்று அச்சன்கோவில் ஐயப்பன் கோயிலுக்கு ஒரு வேனில் சென்று கொண்டிருந்தார். வேனில் 2 குழந்தைகள் உட்பட 14 ஐயப்ப பக்தர்கள் சென்றனர்.

தென்காசி மாவட்டம் பண்பொழி அருகே வடகரை சாலையில் சென்றபோது சாலையின் நடுவில் உள்ள தடுப்புச் சுவர் மீது வேன் மோதி விபத்துக்குள்ளானது. இதனால் வேன் பழுதடைந்தது. வேனில் இருந்தவர்கள் காயமின்றி உயிர் தப்பினர்.

இதை அறிந்த பண்பொழியைச் சேர்ந்த தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தை நிர்வாகிகள் அப்பகுதிக்கு சென்று சென்றனர். குளிர் மற்றும் கொசுக்கடியால் அவதிப்பட்ட ஐயப்ப பக்தர்களுக்கு பண்பொழியில் உள்ள தமுமுக அலுவலகத்தில் தங்குவதற்கு இடம் கொடுத்தனர்.

மேலும் மெக்கானிக்கை அழைத்து வந்து வேனை பழுதுபார்க்க உதவினர். அதிகாலை 3.30 மணியளவில் வேன் பழுது பார்க்கப்பட்டு தயார் செய்யப்பட்டது.

அதுவரை தமுமுக நிர்வாகிகள் உடனிருந்து தேவையான உதவிகளைச் செய்தனர். அவர்களுக்கு நெகிழ்ச்சியுடன் நன்றி கூறி ஐயப்ப பக்தர்கள் விடைபெற்றுச் சென்றனர்.

மதங்களைக் கடந்த மனிதநேயம் பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது.

இதுகுறித்து தமுமுக நிர்வாகிகள் கூறும்போது, "சாலையின் நடுவில் தடுப்பு சுவர் இருப்பது குறித்து எச்சரிக்கை பலகை எதுவும் அப்பகுதியில் இல்லை.

இதனால் வாகனங்கள் அடிக்கடி விபத்துக்குள்ளாகின்றன. இதைத் தடுக்க வேகத்தடை மற்றும் எச்சரிக்கை பலகை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வேன் பழுதடைந்ததால் கொசுக்கடி மற்றும் குளிரில் அவதிப்பட்ட ஐயப்ப பக்தர்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் தேவையான உதவிகளைச் செய்தோம். உதவி செய்வதற்கு மதங்கள் தடையாக இருக்கக்கூடாது. நாங்கள் செய்த உதவிக்கு ஐயப்ப பக்தர்கள் நெகழ்ச்சியுடன் நன்றி கூறி புறப்பட்டு சென்றனர்" என்று கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x