

திருவரங்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற ஒன்றியக் குழு உறுப்பினர்கள் பதவியேற்பு விழாவுக்குப் பின்னர் திமுகவினர் தங்களுக்குள் மோதிக்கொண்டதால், போலீஸார் லேசான தடியடி நடத்தி கூட்டத்தைக் கலைத்தனர். புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியத்தில் மொத்தம் உள்ள 25 ஒன்றியக் குழு உறுப்பினர்களில் திமுக கூட்டணியில் 17 பேர், அதிமுகவில் 6 பேர், சுயேச்சைகள் 2 பேர் வெற்றி பெற்றனர்.
இதில் திமுக பெரும்பான்மை பெற்றுள்ள நிலையில், அக்கட்சியின் கிழக்கு ஒன்றியச் செயலாளர் ஞான.இளங்கோவன், மேற்கு ஒன்றியச் செயலாளர் கே.பி.கே.டி.தங்கமணி ஆகியோர், ஒன்றியக் குழுத்தலைவர் பதவிக்கு (பெண்ணுக்கு ஒதுக்கீடு) அவரவர் மனைவியை நிறுத்த முயற்சி செய்து வருகின்றனர்.
இந்நிலையில், வெற்றி பெற்ற ஒன்றியக் குழு உறுப்பினர்கள் திருவரங்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நேற்று பதவியேற்றனர். பதவியேற்பு விழா முடிந்து, ஒன்றியக் குழு உறுப்பினர்கள் வெளியே வந்தபோது, திமுக மற்றும் சுயேச்சை உறுப்பினர்களில் சிலரை தங்கமணி தரப்பினர் கார்களில் ஏற்றினர்.
உடனே, அந்தக் கார்களை அங்கிருந்து செல்லவிடாமல் இளங்கோவன் தரப்பினர் தடுத்ததால், இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில், சிலர் லேசான காயமடைந்தனர். இதைத்தொடர்ந்து, அப்பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்டோர் திரண்டு கூச்சலிட்டதால், பதற்றம் நிலவியது.
இதற்கிடையே, காரில் ஏற்றப்பட்ட உறுப்பினர்கள் கீழே இறங்காத நிலையில், கார்கள் அங்கிருந்து புறப்பட்டுச்சென்றுவிட்டன. இதைத் தொடர்ந்து, அங்கு திரண்டிருந்தோரை போலீஸார் லேசான தடியடி நடத்தி கலைத்தனர். மேலும், ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் திரண்டிருந்தோரை வெளியேற்றிவிட்டு, கதவை மூடினர்.