Published : 07 Jan 2020 09:36 AM
Last Updated : 07 Jan 2020 09:36 AM

ஆன்லைனில் விண்ணப்பிப்பது நிறைவு: நீட் தேர்வுக்கு 16 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர் - கடந்த ஆண்டைவிட 1 லட்சம் மாணவர்கள் அதிகரிப்பு

எம்பிபிஎஸ், பிடிஎஸ், சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி படிப்புகளுக்கான நீட் தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பது நிறைவடைந்தது. இதில் 16 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.

நாடுமுழுவதும் அரசு, தனியார் மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ், பிடிஎஸ், சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி படிப்புகளுக்கு 2020-21 கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு வரும் மே 3-ம் தேதி நடக்கிறது. தேசிய தேர்வு முகமை (என்டிஏ) நடத்தும் இந்த தேர்வுக்கு www.nta.ac.in / www.ntaneet.nic.in என்ற இணையதளங்களில் விண்ணப்பிப்பது கடந்த டிசம்பர் 2-ம் தேதி தொடங்கியது. நேற்று நள்ளிரவு 11.50 மணியுடன் விண்ணப்பிக்கும் நேரம் முடிவடைந்தது. தேர்வுக் கட்டணம் செலுத்தும் காலஅவகாசம் இன்று நள்ளிரவு 11.50 மணியுடன் நிறைவடைகிறது.

நீட் தேர்வு விண்ணப்பத்தில் ஏதாவது திருத்தங்கள் இருந்தால் வரும் 15-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை செய்யலாம். தேர்வுக்கான ஹால்டிக்கெட்டை மார்ச் 27-ம் தேதி முதல் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். தேர்வு முடிவுகள் ஜூன் 4-ம் தேதி இணையதளத்தில் வெளியிடப்பட உள்ளது.

இந்த ஆண்டு தமிழகத்தில் 1.5 லட்சம் பேர் உட்பட நாடு முழுவதும் 16 லட்சத்துக்கும் மேற்பட்டோர் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர். கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு 1 லட்சத்துக்கும் அதிகமானோர் விண்ணப்பித்திருப்பது குறிப்பிடத்தக்கது. கால்நடை மருத்துவம் மற்றும் பராமரிப்பு படிப்புக்கான (பி.வி.எஸ்சி. - ஏ.ஹெச்) 15 சதவீத அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கும், 2019-ம் ஆண்டு முதல் இந்திய மருத்துவ முறை படிப்புகளான சித்தா, ஆயுர்வேத, யுனானி, ஓமியோபதி (பிஎஸ்எம்எஸ்,பிஏஎம்எஸ், பியுஎம்எஸ், பிஎச்எம்எஸ்) படிப்புகளுக்கும் நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் சேர்க்கை நடைபெற்று வருகிறது.

இந்த ஆண்டு முதல் எய்ம்ஸ், ஜிப்மர் மருத்துவக் கல்லூரிகளிலும் நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறவுள்ளது. தமிழ், ஆங்கிலம், இந்தி, தெலுங்கு, கன்னடம், குஜராத்தி, மராத்தி, ஒடியா, அஸ்ஸாமி, வங்கம், உருது ஆகிய 11 மொழிகளில் நீட் தேர்வுகள் நடக்கிறது.

தமிழகத்தில் சென்னை, கோவை, கடலூர், காஞ்சிபுரம், கரூர், மதுரை, நாகர்கோவில், நாமக்கல், சேலம், தஞ்சாவூர், திருவள்ளூர், திருச்சி, திருநெல்வேலி, வேலூர் என நாடுமுழுவதும் 154 நகரங்களில் நீட் தேர்வு நடைபெற உள்ளது. இந்த ஆண்டு முதல்முறையாக அனைத்து மாநில மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்க வசதியாக தகவல் தொகுப்பு தமிழ், ஆங்கிலம், இந்தி, கன்னடம் உள்ளிட்ட 9 மொழிகளில் இணையதளத்தில் வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. தெலுங்கு மற்றும் மலையாளம் மொழிகளில் மட்டும் தகவல் தொகுப்பு வெளியிடப்படவில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x