

தமிழக மக்கள் எந்த மதத்தைப் பின்பற்றினாலும் அவர்களின் நலன்கள் பாதுகாக்கப்படும் என்று தமிழக அரசு உறுதி அளித்துள்ளது. சட்டப்பேரவையில் ஆளுநர் நேற்று ஆற்றிய உரையில் இதுதொடர்பாக கூறப்பட்டிருப்பதாவது:
தமிழக அரசு எடுத்த முனைப்பான நடவடிக்கைகளால் இலங்கை கடற்படையால் கைது செய்யப்படும் மீனவர்கள், பறிமுதல் செய்யப்படும் படகுகளின் எண்ணிக்கை 2018, 2019-ம் ஆண்டுகளில் குறைந்துள்ளன. தற்போது இலங்கை சிறையில் 17 மீனவர்கள் மட்டுமே உள்ளனர். அவர்களை விடுவிக்க முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இப்பிரச்சினையில் மத்திய அரசு தலையிட்டு சுமுகத் தீர்வு காண வேண்டும்.
நிர்வாகத்தில் தூய்மை, ஆளுமையில் வெளிப்படைத் தன்மை, பொறுப்புடைமை ஆகியவற்றை உறுதி செய்வதுதான் இந்த அரசின் முதன்மை நோக்கம். 2018-ல் லோக் ஆயுக்தா சட்டம் இயற்றப்பட்டு தலைவர், உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டு அச்சட்டம் செயல்படத் தொடங்கியுள்ளது. முதலமைச்சரின் சிறப்பு குறைதீர்க்கும் திட்டத்தின்கீழ் 2019 ஆகஸ்ட் முதல் இதுவரை 9 லட்சத்து 11 ஆயிரம் மனுக்கள் பெறப்பட்டு, அதில் 5 லட்சத்து 18 ஆயிரம் மனுக்களுக்கு 40 நாட்களுக்குள் தீர்வு காணப்பட்டுள்ளது.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடம் ரூ.50 கோடியே 80 லட்சத்தில் விரைவில் கட்டி முடிக்கப்படும். மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த ஆண்டையொட்டி மதுரை அருகில் உள்ள காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகத்தை மத்திய அரசு மேம்படுத்தி, அதை ஊரக வளர்ச்சி மற்றும் காந்திய மெய்யியலுக்கான ஒப்புயர்வு கல்வி மையமாக மாற்ற வேண்டும். ராஜாஜியால் தொடங்கப்பட்ட திருச்செங்கோடு காந்தி ஆசிரமத்துக்கு தமிழக அரசு ரூ.2 கோடி மானியம் வழங்கும்.
இவ்வாறு ஆளுரை உரையில் கூறப்பட்டுள்ளது.