

பள்ளிக்கல்வித் துறை மற்றும் காவல் துறைக்கு கட்டப்பட்ட ரூ.132 கோடியே 7 லட்சத்து 22 ஆயிரம் மதிப்பிலான பல்வேறு கட்டிடங்களை முதல்வர் பழனிசாமி நேற்று திறந்து வைத்தார். இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:
திருப்பூர் மாவட்டம் உடுமலைப் பேட்டை, அமராவதி நகரில் அமைந்துள்ள சைனிக் பள்ளி வளாகத்தில் ரூ.9 கோடியே 87 லட்சத்து 36 ஆயிரம் மதிப்பில் 288 மாணவர்கள் தங்கும் வசதியுடன் கட்டப்பட்டுள்ள சைனிக் இளநிலை மாணவர்கள் விடுதி கட்டிடத்தை காணொலிக் காட்சி மூலம் முதல்வர் திறந்து வைத்தார்.
அதேபோல், ரூ.86 கோடியே 7 லட்சத்து 15 ஆயிரம் மதிப்பில் தருமபுரி, திண்டுக்கல், ஈரோடு, கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, மதுரை, நாகை, பெரம்பலூர், ராமநாதபுரம், நீலகிரி, தூத்துக் குடி, திருச்சி, திருப்பூர், திருவாரூர், திருவள்ளூர், கடலூர், கோவை, விழுப்புரம் மாவட்டங்களில் பள்ளிக் கட்டிடங்கள், ஆய்வகங்கள், கழிப்பறைகள், ஆசிரியர் கல்வி நிறுவன கட்டிடங்கள், ஆசிரியர் இல்லக் கட்டிடம் ஆகியவற்றையும் முதல்வர் திறந்து வைத்தார்.
சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் காலியாக உள்ள 18 நூலகர், தகவல் உதவியாளர் நிலை-2 பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கும், பள்ளிக் கல்வித் துறையில் பணியாற்றி பணிக் காலத்தில் காலமான 43 பணியாளர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் இளநிலை உதவியாளர் பணியிடத்துக்கான பணி நியமன ஆணைகள், பொது நூலகத் துறையில் பணியாற்றி காலமானவரின் வாரிசுக்கு கருணை அடிப்படையில் இளநிலை உதவியாளர் பணி நியமன ஆணைகளையும் முதல்வர் பழனிசாமி வழங்கினார்.
காவல் துறை கட்டிடங்கள்
அரியலூரில் 3 தளங்களுடன் ரூ.7 கோடியே 35 லட்சத்து 19 ஆயிரம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள மாவட்ட காவல் அலுவலகக் கட்டிடத்தை முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார். இதுதவிர, ரூ.28 லட்சத்து 77 ஆயிரத்து 52 ஆயிரம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள 50 காவலர் குடியிருப்புகள், 7 காவல் நிலையங்கள், 5 காவல்துறை இதர கட்டிடங்கள், 3 தீயணைப்புத் துறை கட்டிடங்கள், 55 குடியிருப்புகளையும் அவர் திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில், அமைச்சர்கள் அரசு செயலர்கள் டிஜிபி, சென்னை பெருநகர காவல் ஆணையர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.