

தஞ்சாவூர் மாவட்டம் மதுக்கூர் பகுதியைச் சேர்ந்தவர் குமார்(39). விவசாயக் கூலித் தொழிலாளியான இவரது மனைவி 2015-ல் இறந்துவிட்டார். இதையடுத்து, வேலைக்குச் சென்றுவிட்டு வீட்டுக்கு நாள்தோறும் மது அருந்திவிட்டு வந்த குமார், 5-ம் வகுப்பு படித்து வந்த தனது 10 வயது மகளை பலமுறை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளார்.
சிறுமியிடம் உடல் ரீதியாக ஏற்பட்ட மாற்றத்தை அறிந்த பள்ளி ஆசிரியர்கள் விசாரித்தபோது, விவரத்தை கூறியுள்ளார்.இதையடுத்து ஆசிரியர்கள் அளித்த புகாரின்பேரில் சைல்ட்லைன் அமைப்பினர் விசாரித்தனர். பாதிக்கப்பட்ட சிறுமிகூறியது உறுதி செய்யப்பட்டது. மேலும், அச்சிறுமியை மருத்துவமனையில் பரிசோதித்தபோது, அவருக்கு எய்ட்ஸ் இருப்பதும் கண்டறியப்பட்டது.
இதுகுறித்து பட்டுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சைல்டு லைன் அமைப்பினர் புகார் செய்தனர். இதையடுத்து போலீஸார் வழக்கு பதிவு செய்து குமாரை 20.11.2017-ல் கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு தஞ்சாவூர் போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. குமாருக்கு போக்ஸோ சட்டத்தின் கீழ் நான்கு ஆயுள் தண்டனையும், இயற்கை மரணம் அடையும் வரை வாழ்நாள் ஆயுள் சிறை தண்டனையும், தலா ரூ.1,000 அபராதமும் விதித்த நீதிபதி, தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்குமாறு உத்தரவிட்டார்.
மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்குவதுடன், உயர்தர சிகிச்சையும் வழங்க வேண்டும் என அரசுக்கு நீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது.