

அமமுகவின் கர்நாடக முன்னாள் செயலாளர் புகழேந்தி அக்கட்சியில் இருந்து விலகி முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் முன்னிலையில் அதிமுகவில் மீண்டும் இணைந்தார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப்பின் அதிமுகவில் ஏற்பட்ட குழப்பங்களைத் தொடர்ந்து, முதல்வராக பழனிசாமி பொறுப்பேற்றார். அதன்பின் பிரிந்து சென்ற துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அணயும் இணைந்த நிலையில், சசிகலாவால் நியமிக்கப்பட்ட டிடிவி தினகரன் ஓரங்கட்டப்பட்டார். அப்போது அவருக்கு ஆதரவாக அதிமுகவின் கர்நாடக மாநில செயலாளராக இருந்த புகழேந்தியும் வெளியேறினார். அதன்பின், தினகரனின் தீவிர ஆதரவாளராக இருந்த புகழேந்தி, அமமுக கட்சி ஆரம்பிக்கப்பட்ட நிலையில், அக்கட்சியின் கர்நாடக மாநில செயலாளராக பொறுப்பு வகித்தார்.
இந்நிலையில், தினகரனுக்கும் புகழேந்திக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால், அக்கட்சியில் இருந்து விலகிய புகழேந்தி, தினகரனை கடுமையாக விமர்சித்து வந்தார். அதன்பின், முதல்வர் பழனிசாமியை சந்தித்தார். இந்நிலையில் நேற்று அதிமுக தலைமை அலுவலகம் வந்த அவர், முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலையில், தனது ஆதரவாளர்களுடன் அதிமுகவில் மீண்டும் இணைந்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: முதல்வர், துணை முதல்வர் மற்றும் அமைச்சர்கள், நிர்வாகிகள் அன்புடன் வரவேற்றனர். சிறிது காலம் கூவம் நதிபோல ஒரு சாக்கடையில் மிதந்தேன். தற்போது அதன் உண்மை தன்மை தெரிந்ததும் அங்கிருந்து வெளியேறி, அதிமுகவில் தொண்டராக பணியாற்ற இணைந்துள்ளேன். இது பெரிய மகிழ்வை அளிக்கிறது. நடக்க இருக்கும் தேர்தலில் அதிமுகவின் சிப்பாய்களாக பணியாற்றுவோம்.
ஜெயலலிதாவின் சொத்துக்கள் அரசுடைமையாக்கப்பட வேண்டும். யாரும் சொத்துக்களை சொந்தம் கொண்டாட முடியாது. டிடிவி தினகரன் முழுமையாக தோல்வியடைந்துவிட்டார். இதில் 4-வது பெரிய கட்சி என்று கூறி வருகிறார். நகராட்சி, மாநகராட்சியில் ஒரு இடத்தைக் கூட தினகரனால் பெற முடியாது. முகவரியற்று போய்விட்டார். அக்கட்சியில் இருந்து எல்லோரும் வெளியில் வந்துவிட்டனர். இவ்வாறு அவர்தெரிவித்தார்.