Published : 07 Jan 2020 08:21 AM
Last Updated : 07 Jan 2020 08:21 AM

சென்னை புத்தகக் காட்சி ஜன.9-ல் தொடக்கம்: 5,000 மாணவருடன் புத்தகம் வாசித்த ஆட்சியர்

தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் (பபாசி) சார்பில் சென்னை புத்தகக் காட்சி ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், 43-வது சென்னை புத்தகக் காட்சி நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் வரும் 9-ம் தேதி தொடங்க உள்ளது.

இதையொட்டி, மாணவர்களிடம் புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தவும், சமுதாயத்தில் புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்கவும் புது முயற்சியாக, பபாசி சார்பில் ‘சென்னை வாசிக்கிறது’ என்ற நிகழ்ச்சி ஒய்எம்சிஏ மைதானத்தில் நேற்று நடந்தது. இதில் சென்னை மாவட்ட ஆட்சியர் ஆர்.சீதாலட்சுமி பங்கேற்றார். 5 ஆயிரம் மாணவ, மாணவிகளுடன் அமர்ந்து அவரும் நூல்களை வாசித்தார். பின்னர் மாணவர்கள் மத்தியில் அவர் பேசியதாவது:

பொழுதுபோக்குக்காக மட்டுமே புத்தகங்களை வாசிக்கக் கூடாது. புத்தக வாசிப்பு என்பது அடிப்படை அறிவு சார்ந்தது. சமுதாய வளர்ச்சிக்கும், தனி மனித ஒழுக்க மேம்பாட்டுக்கும் புத்தக வாசிப்பு மிக மிக அவசியம். பாட புத்தகங்களை தாண்டி, மற்ற புத்தகங்களையும் மாணவர்கள் படிக்க வேண்டும்.

புகழ்பெற்ற மனிதர்களில் பலரும் புத்தக வாசிப்பு மூலமாகவே தங்கள் அறிவை வளர்த்துக் கொண்டனர். எனவே, மாணவர்கள் மனதில் புத்தக வாசிப்பை விதைப்பதற்காக இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார். பபாசி தலைவர் ஆர்.எஸ்.சண்முகம் பேசும்போது, ‘‘மக்கள் மத்தியில் புத்தக வாசிப்பு குறைந்துவிட்டது. புத்தக வாசிப்பு குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த பபாசி திட்டமிட்டுள்ளது. இந்த விழிப்புணர்வை மாணவர்களிடம் இருந்து தொடங்க வேண்டும் என்பதற்காக ‘சென்னை வாசிக்கிறது’ நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது. இதை தமிழகம் முழுவதும் ஓர் இயக்கமாக கொண்டுசெல்ல உள்ளோம்’’ என்றார்.

இந்த நிகழ்ச்சியில், திருக்குறள், கீழடி தொடர்பான நூல்கள், தேசிய மற்றும் தமிழக சுதந்திரப் போராட்ட வீரர்களின் வரலாற்று நூல்கள், முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் பொன்மொழிகள் அடங்கிய நூல்கள், மொழிபெயர்ப்பு கதைகள் போன்ற நூல்களை மாணவ, மாணவிகள் வாசித்தனர்.

நக்கீரன் கோபால், பபாசி செயலர் எஸ்.கே.முருகன், பொருளாளர் ஆ.கோமதிநாயகம் உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x