

காஞ்சி மகா பெரியவரின் அருளுரைகள் தென்னிந்தியாவின் பொக்கிஷம் என்று ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் தெரிவித்துள்ளார்.
கலைமகள் அலுவலகம் சார்பில் காஞ்சி மகா பெரியவரின் அருளுரைகள் அடங்கிய தொகுப்பு கடந்த 1933, 1957 ஆண்டுகளில் தமிழில் வெளியிடப்பட்டிருந்தன. அதன் 13 பகுதிகளை, சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி பிரபா ஸ்ரீதேவன் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார்.
‘விஸ்டம் அன்டு கிரேஸ்’ (Wisdom & Grace – Lectures of Mahaswami) என்ற அந்த நூல் வெளியீட்டு விழா சென்னை மயிலாப்பூரில் உள்ள சம்ஸ்கிருத கல்லூரியில் நேற்று நடைபெற்றது. அதில் ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பங்கேற்று வெளியிட்டார். அதன் முதல் பிரதியை தொழிலதிபர் நல்லி குப்புசாமி பெற்றுக்கொண்டார். கழ்ச்சியில் சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பேசியதாவது:
காஞ்சி மகா பெரியவர் மிக உயர்ந்த இடத்தில் இருந்தாலும், அனைவரிடமும் பிரியமாக நடந்துக்கொள்ளக் கூடியவர். அவரது அருளுரைகள் தென்னிந்தியாவின் பொக்கிஷம். அவை பாதுகாக்கப் பட வேண்டியவை. அவை தென்னிந்தியாவின் கவுரவமாகவும் பார்க்கப்படுகின்றன. இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு, அவரது அருளுரைகள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க் கப்பட்டு இருப்பது வரவேற்கத் தக்கது. நல்ல விஷயங்களை உலகறியச் செய்ய எடுக்கப்பட்ட முயற்சிகள் பாராட்டத்தக்கவை.
இதன் மூலம் இந்தியர்கள் மட்டுமல்லாது, வெளிநாட்டினரும் பயன்பெறுவர். வருங்காலதலைமுறையினர் தெரிந்துகொள்ளவும் இது வாய்ப்பாக அமையும். அவரது அருளுரைகளை தேதியிட்டு கலைமகள் அலுவலகம் பதிப்பித்து ஆவணப்படுத்தி இருப்பது பாராட்டுக்குரியது. அதை நீதிபதி பிரபா ஸ்ரீதேவன் பயபக்தியுடன், திறமையாக மொழிபெயர்த்துள்ளார். இது அவருக்கு கிடைத்த பாக்கியம்.
இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக ‘தி இந்து’ குழுமவெளியீட்டாளர் என்.ரவி பேசும்போது, “காஞ்சி மகாபெரியவர் நாகரீக காலத்தில் எளிமையாக வாழ்ந்தவர். தனது காலத்தை பூஜை, பக்தர்களுக்கு அருளுரை வழங்குவது என்று தன்னை அதிகம் ஈடுபடுத்திக் கொண்டவர். அவரது அருளுரையை நீதிபதி பிரபா ஸ்ரீ தேவன் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார். அவரது அருளுரைகளை மொழிபெயர்ப்பது அவ்வளவு எளிதில்லை. அதற்கு ஆங்கில அறிவு மட்டும் போதாது. ஆன்மிக அறிவும் தேவை. அந்த வகையில், சமகால சூழலுக்கு ஏற்ப பிரபா ஸ்ரீ தேவன் சிறப்பாக மொழிபெயர்த்துள்ளார்” என்றார்.
இதுகுறித்து நூல் ஆசிரியர் பிரபா ஸ்ரீதேவன் பேசும்போது, “நான் தமிழ் நூல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கும் பணியை கடந்த 2012-ம் ஆண்டு தொடங்கினேன். அப்போது, மகா பெரியவரின் அருளுரைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பேன் என்று நான் கனவிலும் நினைத்துபார்க்கவில்லை. அவரது அருளுரைகளை மொழிபெயர்க்கும்போது, அவர் அன்றைய காலகட்டத்தில் ஆங்கிலத்தில் பேசியிருந்தால் எந்த ஆங்கில வார்த்தையை பயன்படுத்தியிருப்பார் என சிந்தித்து, சிந்தித்து எழுதினேன்” என்றார்.
இந்நிகழ்ச்சியில் தமிழறிஞர் தேவகி முத்தையா, கலைமகள் அலுவலக வெளியீட்டாளர் ஆர்.நாராயணசுவாமி, கலைமகள் இதழ் ஆசிரியர் கீழாம்பூர் சங்கர சுப்பிரமணியம் ஆகியோர் கலந்துகொண்டனர்.