

மேட்டுப்பாளையம் அருகேயுள்ள தேக்கம்பட்டியில், பவானி ஆற்றங்கரையில் தமிழக அரசு சார்பில் கோயில் யானைகளுக்கான நலவாழ்வு முகாம் கடந்த மாதம் 15-ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இதில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள கோயில்கள் மற்றும் மடங்களுக்குச் சொந்தமான 28 யானைகள் பங்கேற்றுள்ளன.
ஜன. 31-ம் தேதி வரை நடைபெறும் இம்முகாமில் சத்தான உணவு, பசுந்தீவனங்கள், நடைப்பயிற்சி, பவானியாற்று நீரில்‘ஷவர்' குளியல், பூரண ஓய்வு என யானைகள் உற்சாகமாக காணப்படுகின்றன. ஒரே இடத்தில் இவ்வளவு யானைகளை காண்பது அரிது என்பதால், முகாம் தொடங்கிய நாள் முதல் இந்த யானைகளை பார்வையிட வரும் பார்வையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்தபடி உள்ளது.
பள்ளி அரையாண்டு விடுமுறை காரணமாக கடந்த 2 வாரங்களாக முகாமில் மக்கள் கூட்டம் அலைமோதியது. கோவை மட்டுமின்றி, பல்வேறு மாவட்டங்களில் இருந்து தங்களது குடும்பத்துடன் மக்கள் வந்து பார்வையிடுகின்றனர். பாதுகாப்புக்காக அமைக்கப்பட்டிருந்த தடுப்புகளுக்குள் நின்றபடி, பாகன்களின் உத்தரவுக்கு இணங்க வரிசையாய் 'வாக்கிங்' சென்ற யானைகளை ஆச்சரியத்துடனும், ஒருவித அச்சத்துடனும் மக்கள் கண்டு ரசித்தனர். சில யானைகள் ‘மவுத் ஆர்கன்' வாசித்தபடி உற்சாகமாய் நடந்து சென்றதைப் பார்த்து பரவசமடைந்தனர். மக்களின் பாதுகாப்பு கருதி ஆம்புலன்ஸ் வாகனத்துடன், வனத் துறை ஊழியர்கள் தயார் நிலையில் உள்ளனர்.