Published : 07 Jan 2020 08:00 AM
Last Updated : 07 Jan 2020 08:00 AM

வைகுண்ட ஏகாதசி திருநாளை முன்னிட்டு ஸ்ரீரங்கநாதர், பார்த்தசாரதி கோயில்களில் சொர்க்க வாசல் திறப்பு: பல்லாயிரக்கணக்கானோர் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம்

வைகுண்ட ஏகாதசிப் பெருவிழாவையொட்டி திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி உள்ளிட்ட பெருமாள் கோயில்களில் சொர்க்கவாசல் திறப்பு விழா நேற்று அதிகாலை 4.45 மணியளவில் நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பெருமாளை வழிபட்டனர்.

108 வைணவத் திருத்தலங்களில் ஸ்ரீரங்கம் ஸ்ரீரங்கநாதர் கோயில், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் மிகவும் தொன்மை வாய்ந்ததாகக் கருதப்படுகின்றன. இக்கோயில்களில் ஆண்டு முழுவதும் நடைபெற்று வரும் உற்சவங்கள் அனைத்துமே சிறப்பு வாய்ந்தவை என்றாலும், மார்கழி மாதத்தில் நடைபெறும் திருஅத்யயன உற்சவம் என்று அழைக்கப்படும் வைகுண்ட ஏகாதசிப் பெருவிழா மிகவும் பிரசித்திப் பெற்றது.

ஸ்ரீரங்கநாதர் கோயில்

வைகுண்ட ஏகாதசிப் பெருவிழாவில் பகல் பத்து திருநாள் நிறைவடைந்து, நேற்று சொர்க்கவாசல் திறப்பு விழா நடைபெற்றது. இதையொட்டி, நேற்று அதிகாலை 3 மணி முதல் மூலவர் ரங்கநாதர், உற்சவர் நம்பெருமாள் ஆகியோருக்கு மூலஸ்தானத்தில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.இதைத் தொடர்ந்து, அதிகாலை 4 மணியளவில் ரத்ன அங்கி, பாண்டியன் கொண்டை உள்ளிட்ட திருவாபரணங்கள், தோளில் கிளி மாலையுடன் சிறப்பு அலங்காரத்தில் நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு, விரஜா நதி மண்டபத்தை வந்தடைந்தார்.

இதைத் தொடர்ந்து, அதிகாலை 4.45 மணிக்கு சொர்க்க வாசல் திறக்கப்பட்டு அதன் வழியாக நம்பெருமாள் வெளியே வந்து பக்தர்களுக்கு சேவை சாதித்தார். அப்போது, அங்கு கூடியிருந்த பக்தர்கள் ‘கோவிந்தா, கோவிந்தா’ என பக்திப் பரவசத்துடன் நம்பெருமாளை வழிபட்டனர். இதைத் தொடர்ந்து, மாலையில் அரையர் சேவை, இரவு திருப்பாவாடை கோஷ்டி, வெள்ளிச்சம்பா அமுது செய்தல் உள்ளிட்டவை நடைபெற்று, நள்ளிரவு 12 மணிக்கு ஆயிரங்கால் மண்டபத்திலிருந்து வீணை வாத்தியத்துடன் மூலஸ்தானத்தைச் சென்றடைந்தார்.

சொர்க்க வாசல் திறப்பையொட்டி நேற்று முன்தினம் பிற்பகல் முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஸ்ரீரங்கத்துக்கு வந்த வண்ணம் இருந்தனர். பல்லாயிரக்கணக்கான ஆண்கள், பெண்கள் நீண்ட வரிசையில் காத்திருத்து மூலவரை தரிசித்த பின்னர், பரமபத வாசல் வழியாகச் சென்று நம்பெருமாளை வழிபட்டனர்.


ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் சொர்க்க வாசல் திறப்பு விழாவையொட்டி ஆயிரங்கால் மண்டபத்தின் முன், பக்தர்களுக்கு சேவை சாதித்த நம்பெருமாள் | படம்: ஜி.ஞானவேல்முருகன்

ஸ்ரீ பார்த்தசாரதி கோயில்

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திங்கள்கிழமை காலை 1 மணி முதலே பக்தர்கள் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலுக்கு வரத் தொடங்கினர். நேரம் செல்லச் செல்ல பக்தர்கள் கூட்டம் அதிகரித்தது. பக்தர்கள் சொர்க்க வாசல் திறப்பைக் காண, தெற்கு மாடவீதியில் உள்ள கோயில் நூலகத்தின் அருகிலும், மேற்கு கோபுரவாசல் அருகிலும், கோயில் பின்பகுதியிலும் எல்இடி திரைகள் அமைக்கப்பட்டிருந்தன. அதிகாலை 2.30 மணிக்கு உற்சவருக்கு மகா மண்டபத்தில் அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து, அதிகாலை 2.45 மணி முதல் 4 மணி வரை மகா மண்டபத்தில் உற்சவருக்கு வைர அங்கி சேவை நடைபெற்றது.

இதையடுத்து, உற்சவர் ஸ்ரீ பார்த்தசாரதி சுவாமி மகா மண்டபத்தில் இருந்து புறப்பட்டு பரமபத வாசலுக்கு கொண்டு வரப்பட்டார். காலை 4.30 மணி அளவில் சொர்க்க வாசல் என்கிற பரமபத வாசல் திறக்கப்பட்டது. கோயிலுக்கு வெளியே கூடியிருந்த பக்தர்கள் எல்இடி திரைகளில் சொர்க்க வாசல் திறப்பை பார்த்தனர். இதைத் தொடர்ந்து, நம்மாழ்வாருக்கு காட்சி தருதலும், வேதம் தமிழ்செய்த மாறன் சடகோபன் நம்மாழ்வாருக்கு மரியாதை செய்தலும், வேத திவ்ய பிரபந்தம் ஓதுதலும் நடைபெற்றன.

அப்போது பெய்த திடீர் மழையில், பக்தர்கள் நனைந்தபடியும், குடைகளைப் பிடித்தபடியும் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர். நம்மாழ்வாருடன் வீதியுலா நேற்று இரவு 10 மணிக்கு உற்சவர் அலங்கார திருமஞ்சனம் நடைபெற்றது. தொடர்ந்து, இரவு 12 மணி அளவில் நம்மாழ்வாருடன் பெரிய மாட வீதியில் திருவீதி உலா நடைபெற்றது.

பக்தர்கள் பாதுகாப்புக்காக கோயிலுக்கு உள்ளேயும், வெளியேயும் 60 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தன. நான்கு மாட வீதிகளிலும் உயர் கோபுரங்கள் அமைத்து, 500-க்கும் மேற்பட்ட போலீஸார் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x