

ஜேஎன்யுவில் நடத்தப்பட்ட தாக்குதலைக் கண்டித்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) தமிழக காங்கிரஸ் கமிட்டி ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக அறிவித்துள்ளது.
டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் விடுதிக் கட்டண உயர்வு உள்ளிட்ட பிரச்சினைகளுக்காக போராட்டம் நடைபெற்று வந்தது. இந்நிலையில் நேற்று முகத்தில் துணியை கட்டிக் கொண்டு வந்த கும்பல் ஒன்று மாணவர்கள் மீது சரமாரியாகத் தாக்குதல் நடத்தியது. இதில் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் பேரவைத் தலைவர் ஆயிஷ் கோஷ், மண்டை உடைந்தது.
இந்தத் தாக்குதலில் காயம் அடைந்த 18 பேர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவத்தைக் கண்டித்து, நாட்டின் பல்வேறு இடங்களில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் ஜேஎன்யுவில் நடத்தப்பட்ட தாக்குதலைக் கண்டித்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நாளை தமிழக காங்கிரஸ் கமிட்டி ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக அறிவித்துள்ளது.
இது தொடர்பாக தமிழக காங்கிரஸ் கமிட்டியின் ஊடகத்துறைத் தலைவர் கோபண்ணா இன்று வெளியிட்ட அறிக்கையில், '' தலைநகர் டெல்லியில் அமைந்துள்ள வரலாற்றுப் புகழ்மிக்க ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் மீது, நேற்று மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை பாஜக மாணவர் அமைப்பான அகில பாரத வித்யார்த்தி பரிஷத்தைச் சேர்ந்தவர்களும், குண்டர்களும் முகமூடி அணிந்து வந்து காட்டுமிராண்டித்தனமாக தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இதைக் கண்டிக்கிற வகையில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நாளை (07.01.2019) மாலை 4 மணியளவில் சென்னை நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டம் அருகில் நடைபெற உள்ளது.
தமிழக காங்கிரஸ் கமிட்டி சார்பில் இந்திய தேசிய மாணவர் சங்கத்தின் தமிழ்நாடு கிளை மற்றும் சென்னை மாவட்ட காங்கிரஸ் கமிட்டியினர் முன்னின்று இக்கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்துகின்றனர்'' என்று தெரிவித்துள்ளார்.