

உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில் அதிமுக எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை என்ற கருத்து முன்வைக்கப்படும் நிலையில், தேர்தலில் அடைந்த பின்னடைவு குறித்து அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்களுடன் ஓபிஎஸ், ஈபிஎஸ் ஆலோசனை நடத்தியதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
உள்ளாட்சித் தேர்தலில் எப்போதும் ஆளுங்கட்சியே பெருவாரியான வெற்றியைப் பெறுவது வழக்கம். கடந்த 2011-ம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் 90 சதவீத வெற்றியைப் பெற்றது. ஊராட்சி ஒன்றியங்களில் 60 சதவீதத்துக்கு மேற்பட்ட இடங்களைக் கைப்பற்றியது. மாநகராட்சிகளில் 100 சதவீதம் எனும் அளவுக்கு வெற்றியைப் பெற்றது.
இம்முறை உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக ஆளுங்கட்சி என்பதால் பெரிய அளவில் வெற்றியை ஈட்டும் என அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் 27 மாவட்டக் கவுன்சில்களில் 13 மாவட்டக்கவுன்சில்களை திமுகவிடம் பறிகொடுத்தது. ஊராட்சி ஒன்றிய இடங்களில் திமுக 60 சதவீதத்துக்கு மேல் இடங்களை கைப்பற்றியது. ஒன்றியங்களில் திமுக அதிக இடங்களைப் பிடித்தது.
மேற்கு மாவட்டங்களிலும், தென் மாவட்டங்களிலும் வலுவான அதிமுக, இம்முறை தென்மாவட்டங்களில் பலவற்றை இழந்துள்ளது. மேற்கு மாவட்டங்களில் திமுக கணிசமான இடங்களைப் பெற்றுள்ளது. நாடாளுமன்றத் தேர்தலில் வீழ்ந்தோம் அதிலிருந்து மீண்டோம் என அதிமுக தெரிவித்தாலும் தேர்தலில் பின்னடைவு என்பது அதிமுக தலைமையைப் பாதித்துள்ளது.
பல மாவட்ட அமைச்சர்கள் தங்களது தொகுதியில் கட்சியைச் செல்வாக்காக வைத்திருந்தால் கூடுதலாக வெற்றி பெற்றிருக்கலாம், அது 2021 தேர்தலில் மனோரீதியாக அதிமுகவின் வெற்றியாக மாறும் என கூறப்பட்ட நிலையில், தற்போது திமுகவினர் உற்சாக மன நிலையில் இருக்கும் அளவுக்கு தேர்தல் முடிவுகள் உள்ளன.
இந்நிலையில் உள்ளாட்சித் தேர்தல் பின்னடைவு, உள்ளாட்சித் தேர்தலில் வென்ற கட்சி சாரா சுயேச்சைகளை கட்சிக்குள் கொண்டு வருவது, அடுத்தகட்டமாக மறைமுகத் தேர்தலில் கூட்டணிக் கட்சிகளுக்கு அளிக்கப்பட வேண்டிய வாய்ப்பு, ஒதுக்கீடு உள்ளிட்டவை குறித்து அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்களுடன் ஆலோசிக்கப்பட்டது.
குறிப்பாக, பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் வென்ற வடமாவட்டச் செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. இது தவிர எம்ஜிஆர் பிறந்த நாள் விழாவைக் கொண்டாடுவது குறித்தும் , மாநகராட்சி நகராட்சி தேர்தலை நடத்துவது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதனிடையே பாமக சார்பில் வென்ற இடங்களில் தலைவர் பதவிகளை ஒதுக்குவது சம்பந்தமாக பேசுவதற்காக பாமக தலைவர் ஜி.கே.மணி, ஏ.கே.மூர்த்தி, வேலு ஆகியோர் முதல்வர் உள்ளிட்டோரைச் சந்தித்து ஆலோசனை நடத்தினர்.