விருதுநகரில் வெற்றி அறிவிப்பை தவறாக வெளியிட்டதாகக் கூறி போராட்டத்தில் ஈடுபட்ட வேட்பாளர் ராமமூர்த்தி மற்றும் அவரது ஆதரவாளர்கள்.
விருதுநகரில் வெற்றி அறிவிப்பை தவறாக வெளியிட்டதாகக் கூறி போராட்டத்தில் ஈடுபட்ட வேட்பாளர் ராமமூர்த்தி மற்றும் அவரது ஆதரவாளர்கள்.

விருதுநகரில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர் தீக்குளிக்க முயற்சி: வெற்றி அறிவிப்பை தவறாக வெளியிட்டதாக புகார்

Published on

கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்குப் போட்டியிட்ட வேட்பாளர் ஒருவர் தேர்தல் முடிவு தவறாக அறிவிக்கப்பட்டதாகக் கூறி விருதுநகர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் இன்று தீக்குளிக்க முயன்றார்.

விருதுநகர் அருகே உள்ள கூரைக்குண்டு ஊராட்சியில் 8-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு அப்பகுதியைச் சேர்ந்த சரவணன், ராமமூர்த்தி மற்றும் பெண் வேட்பாளர் ஒருவரும் போட்டியிட்டனர்.

இதில், கடந்த 2ம் தேதி விருதுநகர் செந்திக்குமார நாடார் கல்லூரியில் நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையின்போது வேட்பாளர்கள் சரவணன், ராமமூர்த்தி இருவரும் தலா 183 வாக்குகள் பெற்றிருந்தனர்.

அதையடுத்து, இருவரும் 2 நாட்கள் கழித்து விருதுநகர் ஊராட்சி அலுவலகத்திற்கு வருமாறும், அப்போது குலுக்கல் முறையில் வெற்றியாளரை தேர்வு செய்யலாம் என்றும் அதிகாரிகள் கூறி அனுப்பிவைத்துள்ளனர். ஆனால், இன்று காலை குலுக்கல் நடத்தாமல் சரவணன் வெற்றிபெற்றதாக அவருக்கு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. மேலும், அவர் கூரைக்குண்டு ஊராட்சியில் இன்று காலை முறைப்படி ஆவணத்தில் கையெழுத்தி பொறுப்பேற்றுள்ளார்.

இதையறிந்த வேட்பாளர் ராமமூர்த்தி மற்றும் அவரது ஆதரவாளர்கள் குலுக்கல் நடத்தாமல் எவ்வாறு ஒருதலை பட்சமாக வெற்றிபெற்றதாக ஒருவரை அறிவிக்கலாம் எனக் கூறி முற்றுகையிட்டனர். அப்போது, தேர்தல் அலுவலரான வட்டார வளர்ச்சி அலுவலர் விடுமுறை என்பதால் மாவட்ட ஊக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநரை பார்க்குமாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதனால் ஆத்திரமடைந்த வேட்பாளர் ராமமூர்த்தி உடலில் மண்ணெண்ணெய் ஊற்றித் தீக்குளிக்க முயன்றார். அதை அறிந்த போலீஸார் மண்ணெண்ணெய் கேனை பறித்துச் சென்றனர். அப்போது, போலீஸாருக்கும் வேட்பாளர் ராமமூர்த்தி தரப்பினருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அதையடுத்து, அப்பகுதியில் போலீஸார் குவிக்கப்பட்டனர.

தேர்தல் வாக்கு எண்ணிக்கை அறிவிப்பில் குளறுபடி நடந்துள்ளதாகவும் புகார் மனு எழுதிக்கொடுக்குமாறு போலீஸார் கூறியதைத் தொடர்ந்து, வேட்பாளர் ராமமூர்த்தி கடிதம் எழுதிக்கொடுத்தார்.

இதுதொடர்பாக விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனக்கூறி போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீஸார் சமாதானம் செய்து அனுப்பிவைத்தனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in