Published : 06 Jan 2020 06:21 PM
Last Updated : 06 Jan 2020 06:21 PM

மாணவியை நெகிழ்ச்சியுடன் பாராட்டிய சூர்யா: வாழ்த்தும் அஜித், விஜய் ரசிகர்கள்

சென்னை

தனது அகரம் அறக்கட்டளையின் உதவியால் பயின்ற கிராமப்புற ஏழை மாணவி, தன் வாழ்க்கையின் துயரம் குறித்துப் பேசிய மேடைப் பேச்சைக் கேட்டு கண்ணீர் விட்டார் சூர்யா. மாணவியை அரவணைத்து சூர்யா ஆறுதல் கூறியதை, அஜித், விஜய், தனுஷ் ரசிகர்களும் நெகிழ்ந்து போய் பாராட்டியுள்ளனர்.

கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சை புகினும் கற்கை நன்றே என்கிற மூத்தோர் மொழி கல்வியின் சிறப்பை விளக்கும். ஆயிரம் அன்னசத்திரம், பதினாயிரம் கோயில் கட்டுவதைவிட ஏழைக்கு எழுத்தைக் கொடு, அதுதான் உண்மையான கடவுள் பணி என்றார் பாரதியார். இதைப் பலரும் தங்கள் வாழ்க்கையின் லட்சியமாகக் கொண்டு பலரின் கல்விக்கு தங்களால் இயன்ற உதவியைச் செய்கின்றனர்.

இதில் நடிப்புத் தொழிலில் இருக்கும் நடிகர் சிவகுமார், அவரின் மகன்கள் சூர்யா, கார்த்தி ஆகியோர் அகரம் அறக்கட்டளை மூலம் செயலாக்கி வருகின்றனர். அகரம் அறக்கட்டளை மூலம் கல்வி ஒளி பெற்று ஏற்றம் பெற்றோர் பலர்.

சத்தமில்லாமல் சமுதாய அக்கறையுடன் செயல்படும் நடிகர் சூர்யா திரைப்படங்களில் பல சோகத்தைப் பிழியும் காட்சியில் நடித்து தனது ரசிகர்களின் உள்ளத்தைக் கொள்ளை கொண்டிருப்பார்.

ஆனால், நேற்று நடந்த அகரம் விழாவில் தன் செயலால் நிஜ ஹீரோ என்று புகழாரம் சூட்டும் அளவுக்கு உயர்ந்து நின்றார். ஏழை கிராமப்புற மாணவி தன் துயரமான வாழ்க்கை, ஏமாற்றம், அவமானம், வறுமை, தந்தையின் இழப்பு, தாயின் நோய்க் கொடுமை அதையெல்லாம் மீறி சவாலுடன் தான் சாதித்த சோக வரலாற்றை தன்னம்பிக்கையுடன் சொல்லச் சொல்ல சூர்யாவின் கண்களில் நீர் அருவி மாதிரி கொட்டியது. ஆயிரக்கணக்கானோர் அமர்ந்துள்ள அரங்கு, மேடை என்று தெரிந்தும் அவரால் அழுகையைக் கட்டுப்படுத்த முடியவில்லை.

மாணவி பேசப் பேச சுமார் பத்து நிமிடங்கள் கண்களில் வழியும் கண்ணீரைத் துடைக்கக் கூடத் தோன்றாமல், உச்ச நட்சத்திரம் என்பதையும் மீறி உடைந்து போனார். விம்மலுடன் பேச்சை முடித்த மாணவியைப் பாராட்டும் விதமாக, கை தட்டிக் கொண்டே கண்ணீருடன் சென்று, அவரின் தோள்களைத் தட்டிக்கொடுத்து ஆறுதல்படுத்தியது அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

சூர்யாவின் இந்தச் செயலை அஜித், விஜய், தனுஷ் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பாராட்டி வருகின்றனர். ஏன் தமிழகம் முழுவதும் சூர்யாவை மனிதாபிமான உள்ளங்கள் நன்றி தெரிவித்தும், வாழ்த்து தெரிவித்தும் வருவதை சமூக வலைதளத்தில் காண முடிகிறது.


சூர்யா ரசிகர்களின் அதிகாரபூர்வ ட்விட்டர் கணக்கில் அஜித் ரசிகர் ஒருத்தர் போட்டுள்ள பதிவுதான் ஒரு சோற்றுப் பதம்.

கடலூர் தல வெறியன் என்கிற அஜித் ரசிகரான அவர் “யோ சூர்யா அண்ணா! உனக்கு சத்தியமா சொர்க்கம் தான்யா சத்தியமா சொல்றேன் அழுதுட்டேன் யா ” என அஜித் படத்துடன் வாழ்த்தியுள்ளார்.

குமரன் விராட் என்பவர், “ இந்த மனசுதான்யா கடவுள்... இந்த மனுஷன்தான்யா கடவுள்...நடிகன், திரைப்படம் இதெல்லாம் தாண்டி அந்த மனசுக்காகத்தான்யா இந்த மனுஷனுக்கு இன்னைக்கும் ஒரு ரசிகனா இல்ல இல்ல ஒரு தம்பியா இருக்கேன்...
உன்னையும் ஒரு கூட்டம் வெறுக்குதுனா அது மனுஷ ஜென்மமே இல்ல...
எனப் பதிவிட்டுள்ளார்.

நெல்லை நகர துணை ஆணையர் சரவணன் “அகரம்” சூர்யாவின் நற்பணிகளின் சிகரம்” என வாழ்த்தியுள்ளார்.

அவருக்குப் பதிலளித்துள்ள எஸ்.என்.ராஜா என்பவர், “இந்த மாதிரி நல்லவர்கள் அன்று என் வாழ்வில் கிடைத்திருந்தால் நான் என் மேற்படிப்பை படித்திருப்பேன்” என பதிவிட, அதற்கு துணை ஆணையர் சரவணன் , “அவர் போன்று நல்லவராக நீங்கள் மாறுங்கள். யாரேனும் ஒருவரையாவது படிக்க வைப்பதை லட்சியமாக்குங்கள். வாழ்த்துகள்” எனப் பதிலளித்துள்ளார்.

நவீன் சூர்யா என்கிற ரசிகர் நெகிழ்ச்சியுடன், “கடவுள் கண்ணுக்குத் தெரிய மாட்டார்னு சொல்வாங்க, ஆனா எங்க கண்ணுக்கு கல்வி ரூபமாக நல்லாவே தெரிகிறார். அடுத்தவங்க கஷ்டத்தைப் பாத்து அழுகிற மனசு இருக்கே, அதான் கடவுள்...” எனக் குறிப்பிட்டுள்ளார்.

மதுரை தினேஷ் என்பவர் “ எத்தனையோ பேர் வாழ்கையை மாற்றி தன்னால் முடிந்தவரை பல ஏழைக் குழந்தைகளுக்கு வாழ்கையில் கல்வி ஒளியேற்றிய உங்களுக்கு நன்றின்னு சின்ன வார்த்தையைச் சொல்ல முடியாது. மனசாரச் சொல்றேன் நீங்க நல்லா இருக்கணும்!!!” என வாழ்த்தியுள்ளார்.

வினோத் என்கிற விஜய் ரசிகர் ஒருவர் , “ அண்ணா... நான் உங்களை எவ்வளவு விமர்சனம் செய்திருக்கிறேன். இந்த வீடியோ பார்த்த பிறகு உங்களுக்குத் தலை வணங்குகிறேன். உங்கள் பணி தொடர எனது வாழ்த்துகள்” என கை கூப்பி வணங்கியுள்ளார்.

அதற்கு பதிலளித்துள்ள சூர்யா ரசிகர், “நண்பா நீங்க பேசுறத பாக்கும்போது எனக்கு அழுகையே வருது” என்று பதிலளிக்க,

அதற்கு விஜய் ரசிகர்,“இல்ல நண்பா. நானும் வசதியின்மை காரணமாக எனது படிப்பை பாதியிலேயே துறந்தேன். எனக்கும் அந்த வலி தெரியும். அன்னைக்கு சூர்யா அண்ணனைப் போல் எனக்கும் ஒருவர் உதவி செய்திருந்தால் நானும் படித்து நல்ல நிலைக்கு வந்து இருப்பேன்” என்று நெகிழ்ச்சியுடன் பதிலளித்துள்ளார்.

உன் தலைவன் பெரிதா? என் தலைவன் பெரிதா? என சண்டை போடுவதை சமூக வலைதளங்களில் பார்த்துள்ளோம். நல்ல செயல்கள் ரசிகர்களையும் அன்புடனும், நெகிழ்ச்சியுடனும் இணக்கமாக்கும் என்பதைக் காண முடிகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x