

பதவியேற்றவுடன் நிலக்கோட்டை ஒன்றிய அதிமுக கவுன்சிலர்கள் மற்றும் சாணார்பட்டி ஒன்றிய திமுக கவுன்சிலர்கள் வேன்களில் வெளியூர் அழைத்துச் செல்லப்பட்டனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் மொத்தமுள்ள 14 ஒன்றிய தலைவர், துணைத்தலைவர் பதவிகளுக்கு ஜனவரி 11 ம் தேதி மறைமுகத்தேர்தல் அந்தந்த ஒன்றிய அலுவலகங்களில் நடைபெறவுள்ளது. நேற்று பதவியேற்றுக்கொண்ட ஒன்றிய கவுன்சிலர்கள் போட்டியிருப்பின் வாக்களிக்க உள்ளனர்.
தொப்பம்பட்டி, ஒட்டன்சத்திரம், ரெட்டியார்சத்திரம், ஆத்தூர், வத்தலகுண்டு, கொடைக்கானல், பழநி, திண்டுக்கல் ஆகிய எட்டு ஒன்றியங்களில் அ.திமு.க., வை விட அதிக எண்ணிக்கை வித்தியாசத்தில் திமுக கவுன்சிலர்கள் உள்ளதால், அதிமுகவினர் குதிரை பேரத்திலும், கவுன்சிலர்களை தங்கள் பக்கம் இழுக்கும் முயற்சியிலும் ஈடுபடவில்லை.
சாணார்பட்டி ஒன்றியத்தில் மொத்தமுள்ள 19 கவுன்சிலர் வார்டில், திமுக 10 இடங்களையும், அதிமுக 8, தே.மு.தி.க., 1 இடத்தையும் பெற்றது.
இதனால் இரண்டு திமுக கவுன்சிலர்களை அதிமுகவினர் தங்கள் பக்கம் இழுத்தால் தலைவர் பதவியை பெறமுடியும் என்ற நிலைமை உள்ளதால்
திமுகவினர் முன்னெச்சரிக்கையாக தங்கள் கவுன்சிலர்களை இன்று பதவியேற்பு முடிந்தவுடன் வேனில் வெளியூர் அழைத்துச்சென்றனர்.
நிலக்கோட்டை ஒன்றியத்தில் மொத்தமுள்ள 20 வார்டுகளில் அதிமுக- 9, பா.ம.க., 1, இடங்களையும், திமுக 7, சுயேச்சைகள் 3 இடங்களையும் பெற்றனர்.
இந்த ஒன்றியத்தில் திமுக வினர் தலைவர் பதவியை கைப்பற்ற சுயேச்சை உறுப்பினர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதாக அதிமுக வினருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து இன்று நிலக்கோட்டை ஒன்றிய அலுவலகத்தில் பதவியேற்பு முடிந்தவுடன் அதிமுக ஒன்றிய கவுன்சிலர்கள் மற்றும் பா.ம.க., ஒரு சுயேச்சை கவுன்சிலர் ஆகியோரை கார்களில் ஏற்றிக்கொண்டு அதிமுகவினர் வெளியூர் சென்றனர்.
இவர்களை தேர்தல் நடைபெறும் நாளான ஜனவரி 11 ம் தேதி அழைத்துவந்து போட்டியிருப்பின் வாக்களிக்க செய்வர். திண்டுக்கல் மாவட்டத்தில் குறைந்த எண்ணிக்கை வித்தியாசமுள்ள சாணார்பட்டி, நிலக்கோட்டை ஆகிய ஒன்றியங்களில் மட்டுமே அதிமுக, திமுகவினர் தங்கள் கவுன்சிலர்களை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவே காக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.