டெல்டா பாசனத்துக்கு மேட்டூர் அணையில் நீர் திறப்பு: 12 லட்சம் ஏக்கர் நிலம் பயன்பெறும்

டெல்டா பாசனத்துக்கு மேட்டூர் அணையில் நீர் திறப்பு: 12 லட்சம் ஏக்கர் நிலம் பயன்பெறும்
Updated on
1 min read

மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு நேற்று தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இதன்மூலம் 12 லட்சம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

சேலம் மாவட்டம், மேட்டூர் அணையின் நீர்இருப்பைப் பொறுத்து, ஒவ்வோர் ஆண்டும் ஜூன் 12-ம் தேதி காவிரி டெல்டா பாசனத்துக்குத் தண்ணீர் திறந்து விடப்படுவது வழக்கம். இந்த ஆண்டு அணையில் போதிய நீர் இருப்பு இல்லாததால், ஜூன் 12-ல் பாசனத்துக்குத் தண்ணீர் திறக்கப்படவில்லை.

இந்நிலையில், கர்நாடக மாநிலம் மற்றும் காவிரி நீர்பிடிப்புப் பகுதியில் பெய்த பலத்த மழை காரணமாக, அணைக்கு நீர்வரத்து அதிகரித்து அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து 96 அடியைத் தொட்டது.

இதையடுத்து காவிரி டெல்டா பாசனத்துக்கு மேட்டூர் அணை யில் இருந்து தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்கப்பட்டு நேற்று மாலை 4 மணி அளவில் சேலம் மாவட்ட ஆட்சியர் வி.சம்பத் தலைமையிலான அதிகாரிகள் அணையில் இருந்து தண்ணீரை பாசனத்துக்கு திறந்து விட்டனர்.

தொடக்கத்தில் விநாடிக்கு 5 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது. படிப்படியாக 13 ஆயிரம் கனஅடியாக நீர் திறப்பு அதிகரிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இதன்மூலம் சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, கடலூர் மாவட்டங்களில் உள்ள 12 லட்சம் ஏக்கர் விவசாய நிலம் பாசன வசதி பெறும்.

“தற்போது திறந்துவிடப்படும் தண்ணீர் தடையின்றி கடைமடை வரை சென்றடைய வசதியாக காவிரி டெல்டா மாவட்டங்களில் உள்ள கால்வாய்கள், வடிகால் வாய்க்கால்கள் 873.08 கி.மீ. தூரம் ரூ.9.45 கோடி மதிப்பில் தூர்வாரப்பட்டுள்ளது” என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்நிகழ்ச்சியில் மேட்டூர் சார் ஆட்சியர் அனித் சேகர், திருச்சி மண்டல நீர்வள ஆதாரத் துறைத் தலைமைப் பொறியாளர் சோ.அசோகன், மேட்டூர் அணை கோட்டப் பொறியாளர் ரா.சுப்ரமணியன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in