

அரசியலில் புதிய நிகழ்வாக திமுக தலைவர் ஸ்டாலினும், டிடிவி தினகரனும் எதிரெதிரே சந்தித்துக்கொண்டதில் இருவரும் பரஸ்பரம் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துக்கொண்டனர்.
அரசியல்தலைவர்கள் இடையே நட்புடன் பழகும் பண்பாடு முன்னர் இருந்தது. பெரியாரும், ராஜாஜியும் ஆயிரம் மோதல்களில் ஈடுபட்டாலும், சித்தாந்த வேறுபாடு இருந்தாலும் ஒருவருக்கு ஒருவர் மிகுந்த நட்புக்கொண்டிருந்தனர்.
அதேப்போன்று காமராஜரும் பெரியாரும் நட்பு பாராட்டினர். அண்ணா, காமராஜர் நட்பும் அரசியல் தாண்டியதாக இருந்தது. காமராஜர் முன் அண்ணாவை அவதூறாக பேசிய நபரை கண்டித்து பேச்சை நிறுத்தியவர் காமராஜர். அண்ணா ஆட்சிக்கு வந்த சில மாதங்களில் கடுமையான விமர்சனத்தை காங்கிரஸார் வைக்க அதை மேடையிலேயே கண்டித்த காமராஜர் இப்பத்தானே ஆட்சிக்கு வந்துள்ளார்கள் இன்னும் சிலமாதம் போகட்டும் அதுவரை விமர்சிக்கக்கூடாது என்று கட்டளையிட்டார்.
அண்ணா ஆட்சிக்கு வந்தபோது பெரியார், ராஜாஜி, காமராஜரிடம் சென்று ஆசி வாங்கியப்பின் பொறுப்பேற்றுக்கொண்டார். அதன்பின்னர் தமிழக அரசியல் களம் அரசியல் தாண்டி தனிப்பட்ட நபர் பகையாக மாறிப்போனது. ஆனாலும் காமராஜர் மறைவின்போது கருணாநிதி அவரே முன்னின்று அவரது ஈமச்சடங்குகளை அரசு மரியாதையுடன் செய்தார்.
கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக தனி நபர் தூற்றுதல், அரசியல் எதிரி வாழ்க்கையிலும் எதிரி என்கின்ற நிலை இருந்து வருகிறது. இந்நிலையில் எப்போதாவது அத்தி பூத்தாற்போல் அரசியல் தலைவர்கள் நட்புப் பாராட்டுகின்றனர். அதே போன்றதொரு நிகழ்வு இன்று நடந்தது.
சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. இதில் விவாதத்தில் பங்கேற்ற திமுக தலைவர் ஸ்டாலின் குடியுரிமைச் சட்டத்துக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றக்கோரி தீர்மானம் விவாதிக்க அனுமதி கேட்டார். அதற்கு சபாநாயகர் அனுமதி மறுக்கவே வெளிநடப்பு செய்தார். பின்னர் வெளியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார் ஸ்டாலின்.
பேட்டி முடிந்து அறைக்கு திரும்புவதற்காக சட்டப்பேரவை வளாகம் நோக்கி அவர் செல்ல, அப்போது சட்டப்பேர்வையிலிருந்து வெளிநடப்புச் செய்து வெளியே வந்தார் டிடிவி தினகரன். எதிரில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வந்தார் நேருக்கு நேர் அவரைப்பார்த்ததும் டிடிவி தினகரன் வணக்கம் என்று சொன்னார்.
இதை சற்றும் எதிர்பாராத ஸ்டாலின் வணக்கம் என்று பதிலுக்கு தெரிவித்து டிடிவி கையைப்பிடித்து குலுக்கி புத்தாண்டு வாழ்த்துகள் என்று சிரித்தப்படி கூறினார். அதற்கு பதிலுக்கு டிடிவி தினகரன் புத்தாண்டு வாழ்த்துகள் என சிரித்தப்படி கூறினார். இதை அங்கிருந்த திமுக, அமமுக தொண்டர்கள் மகிழ்ச்சியுடன் பார்த்தனர்.