Published : 06 Jan 2020 03:15 PM
Last Updated : 06 Jan 2020 03:15 PM

ஆளுநர் உரை: செக்குமாட்டு சுற்றுப் பாதையில் செல்கிறது; இரா.முத்தரசன் விமர்சனம்

ஆளுநர் உரை செக்குமாட்டு சுற்றுப் பாதையில் செல்கிறது; வளர்ச்சிக்கான பாதை அமைக்கவில்லை என, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் விமர்சித்துள்ளார்.

இது தொடர்பாக இரா.முத்தரசன் இன்று (ஜன.6) வெளியிட்ட அறிக்கையில், "தமிழ்நாடு சட்டப்பேரவையின் நடப்பாண்டு கூட்டத் தொடரைத் தொடங்கி வைத்து ஆளுநர் உரையாற்றிள்ளார். ஆளுநர், தனது உரையைத் தொடங்கும் முன்பு எதிர்க்கட்சிகள் தரப்பில் தெரிவித்த கருத்துகளை காது கொடுத்துக் கேட்க மறுத்துள்ளார்.

தமிழக அரசின் கடன் அளவு உச்சம் தொட்டுள்ள நிலை குறித்து ஆளுநர் உரை கவலைப்படவில்லை. அதிகரித்து வரும் வேலையில்லாதத் திண்டாட்டத்தைப் போக்க எந்தத் திட்டமும் இல்லை. சர்வதேச முதலீட்டாளர் மாநாட்டை ஆகரப்படுத்தி 10 கோடி பேருக்கு வேலை கிடைக்கும் என ஆளுநர் கூறியிருப்பது தாகத்தால் உயிர் போகும் வதைக்கு ஆளாகியிருப்போருக்கு கானல் நீரைக் காட்டி தாகம் தீரக் குடித்துக் கொள்ளுங்கள் என்பது போலிருக்கிறது.

மத்திய அரசின் நிதிப் பகிர்வு முறையால் தமிழ்நாடு சந்தித்து வரும் நிதிப் பேரிழப்பை ஆளுநர் உரை குறைத்து மதிப்பிடுகிறது. மாநில உரிமைகளை பறித்து வரும் மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் உரத்த குரல் எங்கும் ஒலிக்கவில்லை.

எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தலை மனதில் வைத்து சுய உதவிக்குழுக்கள் கடன் நிதி ரூ.12,500 கோடி என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் நுண் நிதி நிறுவனங்களில் கடன் பட்டு அதனைக் கட்ட வழியின்றி அவதிப்படுவோருக்கு நிவாரணம் அளிக்கப்படவில்லை.

அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரான, மதச்சார்பற்ற பண்புகளை நிராகரிக்கிற, சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற கொள்கையைக் கைவிடுகிற, மக்களை மத அடையாளப்படுத்தி பிளவுபடுத்தும் மத்திய அரசு, குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை நிறைவேற்ற ஆளும் கட்சி துணை போவது ஏன் என்பதை ஆளுநர் உரை விளக்கவில்லை.

அரசின் சேவையை மக்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்ல புதிய மாவட்டங்கள் அமைந்திருப்பதைப் பெருமைப்படக் கூறும் ஆளுநர் உரை, அந்த 9 மாவட்ட மக்களின் உள்ளாட்சி ஜனநாயக உரிமை பறிக்கப்பட்டிருப்பதை மூடி மறைத்து விட்டது.

நீட் நுழைவுத் தேர்வு முறையில் தமிழக மாணவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை எதிர்த்தரப்பில் தொடர்ச்சியாக வலுவாக எடுத்துக் கூறியபோதும் காது கொடுத்துக் கேட்காத அரசு, அரியலூர் அனிதா தொடங்கி கிராமப் பகுதி, அடித்தட்டு குடும்பங்களின் குழந்தைகள் தொடர்ந்து உயிரிழந்து வந்த நேரங்களில் உணராத அரசு, தற்போது உச்ச நீதிமன்றத்தின் கதவைத் தட்டியிருப்பது உரிமைகளைப் பாதுகாக்கவா? ஊரை ஏமாற்றவா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

மாவட்டங்களிலும் உள்ளாட்சி வார்டு எல்லைகள் வரையறுப்பதில் தவறுகள் ஏற்பட்டிருப்பதை உச்ச நீதிமன்றத்தில் ஒப்புக் கொண்டது. உள்ளாட்சித் தேர்தல் நடைமுறையில் இதுவரை இல்லாத முறையில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளைப் பிரித்து வைத்திருப்பது மக்கள் குவிந்துள்ள பெருநகரங்களிலும், நகரங்களிலும் உள்ளாட்சி அமைப்புகளில் மக்கள் பிரதிநிதிகள் செயல்பட வழியில்லை.

நடைமுறையில் உள்ள தொழிலாளர் சட்டங்களைக் கைவிடுவது, தொழிலாளர்களை நவீன கொத்தடிமைகளாக கார்ப்பரேட் நிறுவனங்களின் பிடியில் தள்ளிவிடுவது, பாதுகாப்புத்துறை உட்பட பொதுத்துறை நிறுவனங்களைப் பன்னாட்டு நிறுவனங்களிடம் ஒப்படைப்பது என்ற மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைக்கு எதிராக மத்திய தொழிற்சங்கங்கள் முன்வைத்துள்ள கோரிக்கைகளை ஆளுநர் உரை பிரதிபலிக்கவில்லை.

சென்னை ஐஐடி உயர் கல்வி நிறுவனத்தில் நிலவி வரும் சாதி வெறி ஆதிக்கத்தால் மாணவி பாத்திமா லத்தீப் மரணமடைந்திருப்பது பாதுகாப்பாற்ற நிலையை வெளிப்படுத்துகிறது.

உள்ளாட்சித் தேர்தலில் ஆளும் கட்சிக்கு எதிரான உணர்வுகளை வெளிப்படுத்தியுள்ள மக்களின் உணர்வுகளை ஆளுநர் உரை பிரதிபலிக்கவில்லை. மொத்தத்தில் ஆளுநர் உரை செக்குமாட்டு சுற்றுப் பாதையில் செல்கிறது. வளர்ச்சிக்கான பாதை அமைக்கவில்லை" என இரா.முத்தரசன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x