Published : 06 Jan 2020 03:07 PM
Last Updated : 06 Jan 2020 03:07 PM

ஆளுநர் உரை: வரவேற்பு அம்சங்கள்- ஏமாற்றங்கள்; ராமதாஸ் பட்டியல்

ராமதாஸ்: கோப்புப்படம்

சென்னை

ஆளுநர் உரையில் தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சிக்கான திட்டங்கள் புதிதாக அறிவிக்கப்படாதது ஏமாற்றம் அளிக்கிறது என, பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, ராமதாஸ் இன்று (ஜன.6) வெளியிட்ட அறிக்கையில், "தமிழக சட்டப்பேரவையின் 2020-ம் ஆண்டுக்கான முதல் கூட்டத்தை தொடங்கி வைத்து உரையாற்றிய ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், தமிழகத்தில் வாழும் ஈழத் தமிழர்களுக்கு இரட்டைக் குடியுரிமை பெற்றுத் தர நடவடிக்கை எடுக்கப்படும்; தமிழகத்தில் 69% இட ஒதுக்கீடு பாதுகாக்கப்படும் என்பன உள்ளிட்ட பல்வேறு உத்தரவாதங்களையும், உறுதி மொழிகளையும் அளித்திருக்கிறார். இது வரவேற்கத்தக்கதாகும்.

இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்க வேண்டும் என தமிழக அரசு மத்திய அரசினை வலியுறுத்தும்; தமிழக மக்கள் எந்த மதத்தையோ, சமயத்தையோ பின்பற்றினாலும் அவர்கள் அனைவரின் நலனும் பாதுகாக்கப்படும் என ஆளுநர் உரையில் உறுதியளிக்கப்பட்டுள்ளது.

குடியுரிமைச் சட்டத் திருத்தம் காரணமாக ஈழத் தமிழர்களுக்கும், தமிழகத்திலுள்ள முஸ்லிம்களுக்கும் பாதிப்பு ஏற்படும் என்று திட்டமிட்டு பொய்ப்பிரச்சாரங்கள் செய்யப்படும் நிலையில், அவற்றை முறியடித்து உண்மை நிலையை உலகுக்கு விளக்கும் வகையில் ஆளுநர் உரை அமைந்திருக்கிறது. ஈழத் தமிழருக்கு இரட்டைக் குடியுரிமை வழங்கப்பட வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கையை மத்திய அரசுக்கு வலியுறுத்தும் வகையில், அது குறித்து சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற அரசு முன்வர வேண்டும்.

அதேபோல், சமூக நீதியைப் போற்றும் நோக்குடன் தமிழகத்தில் 69% இட ஒதுக்கீடு பாதுகாக்கப்படும் என்றும், அண்ணா பல்கலைக்கழகம் ஒப்புயர்வு பல்கலைக்கழகமாக உயர்த்தப்பட்ட பிறகும் அங்கு மாநில அரசின் இட ஒதுக்கீட்டுக் கொள்கை தொடர்ந்து செயல்படுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு இருப்பது வரவேற்கத்தக்கதாகும்.

தமிழகத்தில் ஒருமுறை மட்டும் பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்கள் தடை செய்யப்பட்டு, ஓராண்டு நிறைவடைந்து விட்ட நிலையில், பிளாஸ்டிக் ஒழிப்புக்கான அடுத்தகட்ட நடவடிக்கை பற்றி ஆளுநர் உரையில் எந்த அறிவிப்பும் இல்லாதது ஏமாற்றமளிக்கிறது.

மத்திய அரசின் 'ஒரே நாடு; ஒரே ரேஷன் அட்டை' திட்டம் தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படும் என்று ஆளுநர் உரையில் அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தைச் செயல்படுத்தும் அதே நேரத்தில், தமிழகத்தில் தற்போது நடைமுறையில் உள்ள அனைவருக்கும் நியாயவிலைப் பொருட்கள் முறைக்கு எந்த பாதிப்பும் ஏற்பட்டு விடாமல் அரசு பார்த்துக் கொள்ள வேண்டும். அதுமட்டுமின்றி, நியாயவிலைக் கடைகளில் அரிசி, பருப்பு, சர்க்கரை போன்ற பொருட்களுக்கு மாற்றாக, அவற்றுக்கான மானியத்தை நேரடியாக மக்களுக்கு வழங்கும் திட்டத்தை மத்திய அரசு திணித்தால் அதை தமிழக அரசு ஏற்றுக்கொள்ளாது என்று அறிவிக்க வேண்டும். இதை இத்திட்டம் குறித்த ஒப்பந்தத்தில் தமிழக அரசு சேர்க்க வேண்டும்.

தமிழகத்தில் தற்போது 29.80 லட்சம் பயனாளிகளுக்கு ஓய்வூதியம் வழங்கப்பட்டு வரும் நிலையில், நடப்பாண்டில் மேலும் 5 லட்சம் பேருக்கு இந்த ஓய்வூதியம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருப்பது வரவேற்கப்பட வேண்டிய ஒன்றாகும்.

2011-ம் ஆண்டு முதல் ஆளுநர் உரைகளில் அறிவிக்கப்பட்ட 105 அறிவிப்புகளில் 73 அறிவிப்புகளும், கடந்த 2017-ம் ஆண்டுக்குப் பிறகு 110-வது விதியின்படி வெளியிடப்பட்ட 453 அறிவிப்புகளில் 114 அறிவிப்புகளும் முழுமையாக செயல்படுத்தப்பட்டிருப்பதாக ஆளுநர் தெரிவித்துள்ளார். மீதமுள்ள அறிவிப்புகளையும் விரைந்து முழுமையாக செயல்படுத்த வேண்டும்.

சென்னை விமான நிலையம் முதல் புதிய புறநகர் பேருந்து நிலையம் அமைக்கப்படவுள்ள கிளாம்பாக்கம் வரை மெட்ரோ ரயில் சேவை நீட்டிக்கப்படும் என்பது உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகள் தமிழக ஆளுநர் உரையில் இடம் பெற்றிருந்தாலும், அவை அனைத்தும் ஏற்கெனவே பல்வேறு தருணங்களில் அறிவிக்கப்பட்டவை தான்.

இவற்றைத் தவிர புதிய அறிவிப்புகளோ, தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சிக்கான திட்டங்களோ புதிதாக அறிவிக்கப்படாதது ஏமாற்றம் அளிக்கிறது. விரைவில் தாக்கல் செய்யப்படவுள்ள நிதிநிலை அறிக்கையிலாவது இதற்கான திட்டங்கள் இடம் பெற வேண்டும்" என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x