ஊரக உள்ளாட்சி தேர்தலில் முறைகேடு, மறுவாக்கு கோரி திமுக முறையீடு; மனுவாக தாக்கல் செய்ய உத்தரவு: உயர் நீதிமன்றத்தில் நாளை விசாரணை

ஊரக உள்ளாட்சி தேர்தலில் முறைகேடு, மறுவாக்கு கோரி திமுக முறையீடு; மனுவாக தாக்கல் செய்ய உத்தரவு: உயர் நீதிமன்றத்தில் நாளை விசாரணை
Updated on
1 min read

ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் போது, முறைகேடு நடைபெற்ற மாவட்டங்களில் மறு வாக்கு எண்ணிக்கைக்கு உத்தரவிடக்கோரி திமுக வேட்பாளர்கள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீட்டை மனுவாக தாக்கல் செய்தால் நாளை விசாரிப்பாதாக உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

ஊரக உள்ளாட்சி தேர்தல் 2 கட்டமாக டிச.27 மற்றும் 30 தேதிகளில் நடைபெற்றது. இதில் வெற்றிப் பெற்றவர்கள் இன்று பதவி ஏற்கின்றனர். இந்நிலையில், திருவண்ணாமலை, சேலம், கடலூர், திருவள்ளூர், திருவாரூர், மன்னார்குடி போன்ற பல இடங்களில் வாக்கு எண்ணிக்கையின்போது அதிமுகவினர் முறைகேடு செய்து வெற்றி பெற்றதாக திமுக சார்பில் குற்றம் சாட்டப்பட்டது.

முறைகேடு செய்து வெற்றி பெற்ற அதிமுகவினர் பதவி ஏற்க தடை கேட்டு தாக்கல் செய்யவுள்ள மனுவை அவசர வழக்காக விசாரிக்க அனுமதிக்கக்கோரி நேற்று தலைமை நீதிபதியை சந்திக்க திமுக வேட்பாளர்கள் தரப்பு வழக்கறிஞர்கள் முயன்றனர். தலைமை நீதிபதியை நேற்று சந்திக்க முடியாததையடுத்து இன்று காலை மீண்டும் சென்னை உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி முன்பு திமுக வேட்பாளர்கள் தரப்பில் அவசர வழக்காக விசாரிக்கக்கோரி முறையிடப்பட்டது.

உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி ஒருவரின் பதவி ஏற்பை தடுக்க முடியாது என தெரிவித்த தலைமை நீதிபதி திமுகவின் முறையீட்டை ஏற்க மறுத்தார். மேலும், இது தொடர்பாக தேர்தல் வழக்கு தொடர திமுக வேட்பாளர்கள் தரப்புக்கு அறிவுறுத்திய தலைமை நீதிபதி, மறுவாக்கு எண்ணிக்கைக்கு உத்தரவிடக்கோரிய திமுக-வின் கோரிக்கையையும் நிராகரித்தார்.

மேலும், இந்த விவகாரம் தொடர்பாக சம்பந்தப்பட்ட தனி நீதிபதியை வேண்டுமானால் அணுகலாம் என தலைமை நீதிபதி தெரிவித்ததை தொடர்ந்து திமுக வழக்கறிஞர்கள் நீதிபதி ஆதிகேசவலு முன்பு முறையிட்டனர்.

இது தொடர்பாக மனு தாக்கல் செய்யும் பட்சத்தில் அந்த மனுவை நாளை விசாரணைக்கு எடுத்து கொள்வதாக நீதிபதி ஆதிகேசவலு தெரிவித்துள்ளார். இதன்பின்னர் தாக்கல் செய்துள்ள மனுவில் ஜனவரி 11 நடைபெறவுள்ள நேரடி தேர்தலுக்கு தடை விதிக்கவும், மறு வாக்கு எண்ணிக்கைக்கு உத்தரவிடவும் கோரிக்கை வைத்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in